தொகுதி பங்கீட்டில் அதிருப்தி… திமுக முடிவால் ராகுல் குழப்பம்! திமுக அணியில் இருந்து காங். வெளியேறுகிறதா….?

Author: Babu Lakshmanan
5 January 2024, 8:04 pm

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படலாம், இதில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது.

இதற்குக் காரணம் கடந்த மாதம் 29ம் தேதி பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் சென்னை கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசியதும், அதன் தொடர்ச்சியாக ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பி,முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை அவருடைய வீட்டில் சந்தித்ததும்
ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பார்க்கப்படுகிறது.

சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது டி ஆர் பாலு, தொகுதி பங்கீடு தொடர்பாக விரிவான பேச்சு வார்த்தை நடத்தியும் இருக்கிறார்.

அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படும், டெல்லி மேலிடம் எதிர்பார்ப்பது போல 15 சீட்டுகள் எல்லாம் ஒருபோதும் கிடைக்காது. ஏனென்றால் கூட்டணியில் புதிய வரவுகளுக்கு இடம் தரும் வகையில், தொகுதி பங்கீட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

அது மட்டுமல்லாமல் விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 2019 தேர்தல் போல இரண்டு தொகுதிகளை நாங்கள் ஒதுக்கப் போவதில்லை. கூட்டணி விரிவடையும்போது தலா ஒரு எம்பி சீட்டுதான் வழங்கப்படும் என்பதை அந்தக் கட்சிகளின் தலைவர்களிடம் தெரிவித்து விட்டோம். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். அதுபோல காங்கிரஸ் தலைமையும் எங்களுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று சிதம்பரத்திடம் அவர் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக தங்கள் அணியில் புதிய வரவுகள் குறித்து திமுக தரப்பில்
ப சிதம்பரத்திடம் விரிவாகவே பேசப்பட்டுள்ளது. இதை உடனடியாக அவர் காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மூவரிடமும் தெரிவித்தும் விட்டிருக்கிறார். இது குறித்த தகவல்கள் இப்போதுதான் ஊடகங்களில் மெல்ல மெல்ல கசிந்து தமிழக காங்கிரசை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவை உள்ள நிலையில் புதிய வரவுகள் என்று டி ஆர் பாலு டாக்டர் ராமதாஸின் பாமகவையும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

திமுக கூட்டணியில் பாமக இணைந்தால், அக் கட்சிக்கு நான்கு தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும் கமல் கட்சிக்கு பெரம்பலூரில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.

ஏற்கனவே திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில் எதற்காக பாமகவை உள்ளே கொண்டு வரவேண்டும் என்ற கேள்விக்கான தெளிவான பதில் இதுவரை காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை. அதேநேரம் கமலின் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது அரசியலில் உள்ள அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்று.

அவருக்கு கடந்த முறை இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது. அதேநேரம் முஸ்லிம் லீக் தவிர, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்றவற்றுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்பட மாட்டாது என்றும், மதிமுக விரும்பினால் 2019 தேர்தலில் திமுக சின்னத்தில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டது போல வேட்பாளரை நிறுத்திக் கொள்ளலாம் என்ற யோசனையும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, என்கிறார்கள்.

இந்த கணக்கின்படி பார்த்தால் திமுக மட்டும் 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதும், காங்கிரசுக்கு 5, பாமகவுக்கு 4, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் என்பதை யூகிக்க முடிகிறது.

நடிகர் கமல் தனக்கு கோவை அல்லது தென்சென்னையில் போட்டியிட வாய்ப்பு தாருங்கள், பெரம்பலூர் எனக்கு வேண்டவே வேண்டாம் என்று அறிவாலயத்திடம் மன்றாடி வரும் நிலையில் மார்க்சிஸ்ட்டோ, எங்களுக்கு மதுரையை ஒதுக்காவிட்டாலும் கூட பரவாயில்லை கோவையை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம் என்று இன்னொரு பக்கம் மக்கள் நீதி மய்யத்திற்கு செக் வைக்கிறது.

இந்த நிலையில்தான் திமுகவிற்கு போக்கு காட்டும் விதமாக டெல்லி காங்கிரஸ் தலைமை புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுகவுடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அத்துடன் பாமகவின் வரவை விரும்பாத திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் இந்த அணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற யோசனையை காங்கிரஸ் தலைமை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படியொரு நல்வாய்ப்பு தங்களுக்கு அமையலாம் என்பதை அதிமுக தலைமையும் நன்கு உணர்ந்தே உள்ளது. காங்கிரஸ் தங்களுடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் 12 தொகுதிகள் வரையிலும் விடுதலை சிறுத்தைகளுக்கு அதிக பட்சமாக நான்கு எம்பி சீட்டுகளும் ஒதுக்கி தருவதற்கு அதிமுக தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம், தங்களுடன் கூட்டணி வைக்கும்போது அதை இண்டியா கூட்டணி என்று அழைக்கக்கூடாது என்ற நிபந்தனையை, அதிமுக விதிக்க வாய்ப்பும் இருக்கிறது என்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம் என்று காங்கிரஸ் மேலிடம் கூறுவதே திமுக தலைமையை மிரட்டுவதற்காகத்தான் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. “எங்களுக்கான தொகுதிகளை கணிசமாக குறைத்தாலோ,
அல்லது நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை தராவிட்டாலோ நாங்கள் அதிமுக பக்கம் போய் விடுவோம் என்று பூச்சாண்டி காட்டுவதற்காகத்தான் இந்த நாடகத்தையே காங்கிரஸ் நடத்துகிறது” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர்களான கே எஸ் அழகிரி,
கே வி தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், செல்வப் பெருந்தகை போன்றவர்கள் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் திமுக தலைமையை மிகுந்த விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டும் விட்டார்கள். திமுக நிர்வாகிகள், தொண்டர்களை விட இவர்கள் அத்தனை பேருமே முதலமைச்சர் ஸ்டாலினின் முழு நேர ஆதரவாளர்களாக மாறியும் விட்டனர். இவர்களை மீறி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா, கார்கே மூவரும் எந்த முடிவையும் எடுக்கமாட்டார்கள் என்பதுதான் எதார்த்த நிலை.

ஒருவேளை அதிமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துவிட்டால், இவர்கள் அத்தனை பேரும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதனால் கடந்த தேர்தல் போல எங்களுக்கு ஒன்பது தொகுதிகளுக்கு குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கூட்டணியில் எத்தனை கட்சிகளை சேர்த்துக் கொண்டாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறும் நிலைக்குத்தான் டெல்லி காங்கிரஸ் மேலிடம் தள்ளப்படும் என்பது நிச்சயம்.

தற்போது திமுக ஆதரவு தமிழக காங்கிரஸ் தலைவர்களும், முதலமைச்சர் ஸ்டாலினிடம் தனிப்பட்ட முறையில் காங்கிரசுக்கு ஒன்பது தொகுதிகளை ஒதுக்குங்கள் என்ற வேண்டுகோளை மறைமுகமாக வைத்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம் இண்டியா கூட்டணியில் இருந்து, திமுகவை வெளியேற்றுவதற்கு காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் தெரிகிறது. அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களில் தங்களது தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது.

இதேபோல ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு ஆகியவையும் இந்த விவகாரத்தில் திமுக மீது கடும் அதிருப்தியில் இருப்பதும் தெரிகிறது. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலிலும் உதயநிதியும் சனாதன ஒழிப்பு பேச்சை தங்களின் பிரச்சார ஆயுதமாக பாஜக எடுத்தால் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று இந்த கட்சிகளின் தலைவர்கள் கருதுகின்றனர்.

அதனால்தான் திமுக தலைவர்கள், எம்பிக்கள் இண்டியா கூட்டணியை பாதிக்கும் விதமாக ஏதாவது கருத்து தெரிவித்தால் உடனடியாக அதற்கு தங்களை எதிர்ப்பையும் அவர்கள் பதிவு செய்கின்றனர். இது திமுகவை தங்களது கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதற்கான ஒரு மறைமுக நடவடிக்கையாக கூட இருக்கலாம்” என்றும் அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

காங்கிரஸ் எதிர்பார்க்கும் 15 தொகுதிகளை திமுக விட்டுக் கொடுக்க முன் வருமா?….அல்லது கேட்ட தொகுதிகள் கிடைக்காத கோபத்தில் திமுக அணியில் இருந்து வெளியேறி அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா?என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

எது எப்படியோ, இது போன்றதொரு கூட்டணி அமைந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக அணிகளிடையே கடுமையான மும்முனைப் போட்டி உருவாகும் என்பது மட்டும் உறுதி.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 395

    0

    0