திமுகவிடம் எம்பி சீட் பெற போட்டா போட்டி?… புதிய ரூட்டில் காங்..எம்பிக்கள்!
Author: Udayachandran RadhaKrishnan5 March 2023, 8:12 pm
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த 1-ம் தேதி சென்னை வந்த காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது யாருமே எதிர்பாராத விதமாக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செக் வைத்தார்.
பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்?
“தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது?ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வர வேண்டும்.எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகத் தேர்தலை சந்தித்தபின் பிரதமர் தேர்வு பற்றி முடிவெடுக்கலாம்” என்று அதிரடி காட்டினார்.
அது மட்டுமல்ல அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்திலும் இதே கருத்தையே பரூக் அப்துல்லா, வலியுறுத்தினார். “ஸ்டாலின் தேசிய அரசியலுக்கு வரவேண்டும்.
அவருக்கு பக்கபலமாக நாங்கள் இருப்போம். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை இப்போதைக்கு நாம் மறந்து விட வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெறவேண்டும். அதன் பிறகு யார் பிரதமராக வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்” என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேசிய அரசியலில் இருக்கிறேன்
ஏற்கனவே பிரதமர் பதவியை குறிவைத்து முதலமைச்சர்கள் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சந்திரசேகர ராவ் மூவரும் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் பரூக் அப்துல்லா எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியது தேசிய அளவில் பெரும் பேசு பொருளாக மாறியது.
இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ வி கே எஸ் இளங்கோவன்
வெற்றி பெற்றதை தொடர்ந்து ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது தேசிய அரசியலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேண்டும் என்று பல்வேறு மாநில கட்சித் தலைவர்கள் பேசியது பற்றிய கேள்விக்கு அவர் பதிலும் அளித்தார்.
“நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் இருக்கிறேன். அதில் எந்த மாற்றமுமில்லை. 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், யார் பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக வரக்கூடாது, யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதுதான் எங்களின் கொள்கை” என்று குறிப்பிட்டார்.
அண்ணாமலை கிண்டல்
இதுபற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் “கும்மிடிப்பூண்டிக்கு அப்பால் தெரியாத, ஆனால் தன்னை தேசிய தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் தலைவர், கடந்த 22 மாதங்களில் தனது மகனுக்கு அமைச்சராக முடிசூடியது மட்டுமே சாதனையாக இருந்தது” என்று ஸ்டாலினை கிண்டலடித்து இருந்தார்.
அண்ணாமலை இப்படி கூறியதால் உடனடியாக திமுக அமைச்சர்களும் இரண்டாம் நிலை தலைவர்களும்தான் கொதித்தெழுந்து பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எல்லோரையும் முந்திக்கொண்டு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம்தான் அண்ணாமலையை வறுத்து எடுத்து உள்ளார்.
காங்கிரஸ் எம்பி காட்டம்!!
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அணிகள் அமைந்த பின்னர்தான் தேர்தலை கணிக்கமுடியும். இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக அமையும் கூட்டணிக்கு காங்கிரஸ் அச்சாரமாக இருக்க வேண்டும். பிரதமர் வேட்பாளராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசப்படுவதில் தவறு கிடையாது. மாநில முதலமைச்சராக இருந்தவர்கள் பிரதமராகி உள்ளனர். அதனால் ஒரு மாநில முதலமைச்சர் இந்தியாவுக்கு பிரதமராக வேண்டும் என அக்கட்சி எண்ணுவதில் எந்த தவறும் இல்லை. ஏன் நரேந்திர மோடி கூட பிரதமராகி உள்ளார்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், அதுவும் இந்திய அளவில் ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சரை மாநில எல்லைக்கு தாண்டி தெரியாது என்றால் பொது அறிவு இல்லாதவர்கள்தான் இப்படிச் சொல்வார்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, திமுக அரசையோ முதலமைச்சர் ஸ்டாலினையோ அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கடுமையாக விமர்சிக்க நேர்ந்தால் அதை முதலில் கண்டிப்பது காங்கிரஸ் ஆகத்தான் உள்ளது. அதன் பிறகே மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் வசை பாடுகின்றன.
அதுவும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான விவகாரம் என்றால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்தான் எல்லோரையும் முந்திக்கொண்டு திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அரசியல் விமர்சகர்கள் கருத்து
“நாட்டின் மிகவும் பழமை வாய்ந்த ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவர்கள் தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவுக்கு கண்களை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பதும் முட்டு கொடுப்பதும் சரியான செயல் அல்ல. முன்பு அதிமுக தலைவர்கள் மத்திய பாஜக அரசிடம் அடிமைகள் போல் நடந்து கொள்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேலி பேசினர். ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு தமிழக காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது போல இன்று நடந்து கொள்கின்றன” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“மாநில முதலமைச்சர்களாக இருந்தவர்களில் மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி பி சிங், தேவே கவுடா, நரசிம்ம ராவ், நரேந்திர மோடி போன்றோர் பிரதமர் பதவிக்கு வந்தவர்கள் என்பது உண்மைதான். என்றாலும் கூட தேசிய அளவில் பிரதான கட்சிகளின் தலைவர்களாக பதவி வகித்தவர்கள்தான் மத்தியில் தங்களுடைய ஆட்சி காலத்தை முழுமையாக நிறைவு செய்தவர்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்ட ஆக வேண்டும். அதாவது காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளை சேர்ந்தவர்களுக்கே இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது.
அறியாதவரா கார்த்தி சிதம்பரம்?
1977-ல் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசை வீழ்த்தி மத்தியில் ஆட்சி அமைத்த ஜனதா கட்சியின் மூத்த தலைவரான மொரார்ஜி தேசாய் கூட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பிரதமர் பதவியில் நீடிக்க முடியவில்லை. மேலும் சந்திரசேகர், ஐ கே குஜரால், சரண் சிங், வி பி சிங், தேவே கவுடா ஆகியோரின் ஆட்சிகள் அற்ப ஆயுளிலேயே முடிந்தும் போயின. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாவது அணி தலைமையில் அமைந்த எந்தவொரு மத்திய அரசும் நாட்டை முழுமையாக ஆட்சி செய்தது கிடையாது.
கார்த்தி சிதம்பரம் இதையெல்லாம் அறியாமல் பேசி இருப்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
அதேநேரம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், திமுக 30 முதல் 32 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலை உறுதியானால் தமிழகத்தில் காங்கிரசுக்கு 5 தொகுதிகளுக்கு மேல் ஒரு எம்பி சீட் கூட கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் பயந்துபோய் முதல் ஆளாக அண்ணாமலைக்கு அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.
காய்களை நகர்த்தும் ஜோதிமணி
அதேபோல் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் கடும் மோதல் போக்கை கொண்டிருந்த கரூர் எம்பி ஜோதிமணி தற்போது மெல்ல மெல்ல அதை கைவிட்டும் வருகிறார். தனது மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வந்த அமைச்சர் உதயநிதியை அவர் ட்விட்டர் பதிவில் வெகுவாக
பாராட்டியும் உள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர் செந்தில் பாலாஜிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி மற்ற காங்கிரஸ் எம்பிகளும் தங்களது தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்காக திமுக தலைவர் ஸ்டாலினையோ அல்லது உதயநிதியையோ புகழ்ந்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
அதேநேரம் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்திற்கு ராஜ்யசபா எம்பி பதவியை திமுக தானாக விட்டுக் கொடுத்தது. அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ வி கே எஸ் இளங்கோவனை நிற்க வைத்து அவருக்காக 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து வெற்றி பெறவும் வைத்துவிட்டது. இதனால் இனி திமுக சொல்கிறபடி கேட்டு நடக்கவேண்டிய இக்கட்டான நிலையும், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே காங்கிரஸ் 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.
காங்., தலைமையல் தேசிய அணி அமையுமா?
அதனால் காங்கிரஸ் தலைமையில் தேசிய அளவில் ஒரு அணி அமையுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் சென்னையில் பரூக் அப்துல்லா எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது பற்றி பேசிய மறுநாளே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். பாஜகவை தோற்கடிக்க விரும்பும் கட்சிகள் அனைத்தும் எங்களை ஆதரிக்கவேண்டும் என்று ஒரு சரவெடியை கொளுத்தி போட்டார்.
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை ஆளும் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகியவற்றில் தனித்துப் போட்டியிடும் விதமாக காய்களை நகர்த்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அவர் இப்படி செயல்படுவது வெளிப்படையாகவே தெரிகிறது.
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பிரதமர் கனவுடன் தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற தனது கட்சியை பாரத ராஷ்டிர சமிதி
என பெயர் மாற்றம் செய்து தேசிய அரசியலில் குதித்து இருக்கிறார்.
இதனால் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.