துளியும் யோசிக்காதீங்க… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்க… மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை..!!!
Author: Babu Lakshmanan20 April 2022, 10:27 am
சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 25க்கும் குறைவான பாதிப்புகளே தென்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், அதனை தடுக்கும் கட்டுப்பாடுகளில் மக்களிடம் அலட்சியம் காணப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், தற்போது 25 பேருக்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகத் தொடங்கியிருப்பது சற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் சற்று தலைதூக்கியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது ;- டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளத. எனவே, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி ஆகிய தடுப்பு பணிகளில் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.