நட்பு ரீதியாக அணுகியிருந்தால் காவிரி நீரை பெற்றிருக்க முடியும் : திமுக மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 October 2023, 5:07 pm
நட்பு ரீதியாக அணுகியிருந்தால் காவிரி நீரை பெற்றிருக்க முடியும் : திமுக மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீதான காரசார விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது.
இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பதில் கூறினர்.
இறுதியில் இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றைய நிகழ்வு முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், காவிரியில் இருந்து வரும் தண்ணீரை கர்நாடக அரசு ராட்சச மோட்டார்கள் மூலம் கர்நாடகா அணைகளுக்கு திருப்பி விடுவதாக தகவல் கிடைத்துள்ளன.
எல்லா நீர்நிலைகளும் நிரப்பிய பிறகு தான் எஞ்சிய நீரை தான் தமிழக அணைகளுக்கு வந்து சேர்கிறது. ஆனால், தமிழகத்தில் அப்படியல்ல. முழுக்க முழுக்க அண்டை மாநிலத்தை நம்பி தான் இருந்து வருகிறோம். அதனால் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் பேசி உள்ளேன்.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக காவிரி நீரை பெறுவதற்காக 84 மணி நேரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தார் என தெரிவித்த இபிஎஸ், குருவை சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்கபெறப்படவில்லை டெல்டா மாவட்டத்தில் 5 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி பயிர் செய்து இருந்தார்கள். நீர் பற்றாக்குறை காரணமாக சுமார் மூன்று லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
ஒரு ஹெக்டருக்கு 13,500 மட்டுமே தமிழக அரசால் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது. இது போதாது உயர்த்தி வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். அது மட்டுமல்ல, பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக ஒரு ஹெக்டருக்கு 84,000 கிடைக்கும். ஆனால் இந்தாண்டு அரசு பயிர் காப்பீடு திட்டத்தை சேர்க்காத காரணத்தால் இன்று இழப்பீடு தொகை கிடைக்காத நிலை உள்ளது.
காப்பீட்டுத் தொகை சேர்க்கப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைத்திருக்கும். இழப்பீடு தொகை கிடைத்து இருந்தால் விவசாயி நஷ்டத்திற்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.
அதே போல் சம்பா சாகுபடி , தாளடி சாகுபடிக்கு தேவையான நீரை பெறுவதற்கான நடவடிக்கை என்ன என்று சட்டப்பேரவையில் கேட்டுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அரிசி விலை உயர்ந்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
திமுக தேசிய கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார்கள். இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகித்து உள்ளது. கர்நாடக காங்கிரஸ் அரசுடன் நட்பு ரீதியாக பேசியிருந்தால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் நமக்கு கிடைத்திருக்கும்.
அதிமுக ஆட்சி காலத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு தாமதம் ஏற்படுத்தியது.
உடனடியாக அதிமுக அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க செய்தது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.