விவசாயியை காலில் சுட்டு பிடித்திருக்கலாமே?… திமுக அரசு மீது பாயும் கேள்விக் கணைகள்!
Author: Udayachandran RadhaKrishnan29 October 2023, 7:30 pm
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு கடந்த இரண்டரை ஆண்டுகளில் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகள் தொடர்பாக எழுந்த மிக மோசமான நிலைமையை சமாளிக்க மாநில போலீசார் இதுவரை துப்பாக்கி சூடு நடத்தியதே இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் பெருமையுடன் கூறி வந்த நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
முதல் முறையாக, அக்டோபர் 29-ம் தேதியான இன்று அதிகாலை தமிழக வனத்துறையினரால் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட துயர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பு என்று சமூக வலைத்தளங்களில் திமுக அரசை நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.
வேதனை தரும் அந்த நிகழ்வு குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் வனக்காப்பகம், கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காப்புக்காடு பகுதிகள் உள்ளன. இங்குள்ள வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே வண்ணாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் வனவர் திருமுருகன் தலைமையில் ரோந்து சென்றனர்.
அப்போது சிலர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் வனத்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்புக்காக வனத்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவர் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி வனத்துறையினர் விசாரித்தபோது குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 55 வயது ஈஸ்வரன் என்பது தெரிய வந்தது.
இந் நிலையில் ஈஸ்வரனை வனத்துறையினர் திட்டமிட்டு சுட்டுக்கொன்று விட்டனர் என்று கோபம் கொப்பளிக்க அவருடைய உறவினர்கள் உள்ளிட்ட குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் ஈஸ்வரனின் உடல் வைக்கப்பட்டு இருந்த கம்பம் அரசு மருத்துவமனை முன்பாக திரண்டனர்.
அப்போது அங்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது “இரவில் விவசாய நிலத்துக்கு காவல் இருந்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஈஸ்வரனை வேண்டுமென்றே வனவர் திருமுருகன் சுட்டுக் கொன்று விட்டார், குண்டு ஈஸ்வரனின் மார்பில் பாய்ந்துள்ளது. எனவே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. இதற்கு முன்பகை கூட காரணமாக இருக்கலாம். அதனால் திருமுருகனை உடனடியாக கைது செய்யவேண்டும்” என்று கோஷங்களையும் எழுப்பினர். மேலும் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
அதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். அப்போதும் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்ததால் போலீசார் அவர்களை பின்னர் லோயர் கேம்ப் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சு நடத்தினர்.
இதனிடையே ஈஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில்,” விவசாயி ஈஸ்வரன் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தார். மேலும் வனத்துறையினரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றார். இதனால்தான் வனத்துறையினர் தங்களின் பாதுகாப்புக்காக அவரை சுட்டுக் கொன்றனர். அவருடன் வந்த சிலரையும் தேடி வருகிறோம். காப்புக்காட்டுக்குள் பொதுமக்கள் வர அனுமதி இல்லை” என்றனர்.
“வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் விவசாயி பலியான சம்பவம் அடர்ந்த வனப் பகுதிக்குள் நடந்துள்ளது. அதனால் இது பல்வேறு சந்தேகங்களையும் கிளப்புகிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரை தமிழகத்தில் துப்பாக்கி சூட்டில் ஒரு விவசாயி கூட இறந்ததே இல்லை. எத்தகைய சூழ்நிலையிலும் துப்பாக்கி சூடு நடத்தக்கூடாது, யாருடைய உயிரிழப்புக்கும் நீங்கள் காரணமாகி விடக்கூடாது என்று ஸ்டாலின் பலமுறை அனைத்து துறை போலீஸ் அதிகாரிகள் கூட்டத்திலும் அறிவுறுத்தி இருக்கிறார். இதை காவல்துறையினர் அப்படியே பின்பற்றியுள்ளனர் என்பதை ஒரு சில நிகழ்வுகள் மூலம் அறிந்து கொள்ளவும் முடியும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி அருகே நடந்த
பள்ளி கலவரத்தின்போது கூட வன்முறையாளர்களை விரட்டியடிக்க போலீசார் அதிகபட்சமாக கண்ணீர் குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும்தான் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதன் பிறகு சில சம்பவங்களில் பிரபல ரவுடிகள் ஏழு, எட்டு பேர் வரை என்கவுண்டர் முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பல குற்றவாளிகளை காவல்துறை அதிகாரிகள் காலில் சுட்டு உயிருடன் பிடித்தும் இருக்கிறார்கள்.
பல நேரங்களில் போலீசாரின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் தப்பி ஓட முயற்சிக்கும் குற்றச் சரித்திர பதிவு கொண்ட கடும் குற்றவாளிகள் கீழே தவறி விழுந்து கை கால்களை உடைத்துக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை இரவு நெய்வேலியில் பிரியாணி கடை அதிபர் கண்ணனை சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் சிலர் இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் ஓசியாக பிரியாணி தர மறுத்துவிட்ட ஒரே காரணத்திற்காக பழிவாங்கும் நோக்கில் சரமாரியாக வெட்டிக் கொலையும் செய்தனர். இக் கொலை தொடர்பாக சிக்கிய குற்றவாளிகள் இருவர் கூட போலீசாரிடமிருந்து தப்பி ஓட முயன்றபோது தங்களது கால்களை உடைத்துக்கொண்டு படுகாயமும் அடைந்தனர்.
ஒருவர் எத்தகைய கொடிய குற்றச்செயலில் ஈடுபட்டிருந்தாலும் அவரை உயிருடன் பிடிப்பதற்கே பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரும், வன இலாகா ரேஞ்சர்களும் முயற்சிக்கவேண்டும். அவர் கடுமையான குற்றவாளியாக இருந்து ஆயுதங்களுடன் தாக்க வந்தால் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தலாம். அதிலும் முதலில் காலில் சுட்டு உயிருடன் பிடிப்பதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஆனால் வனத்துறை ஊழியர் நடத்திய துப்பாக்கி சூடு விவகாரத்தில் ஈஸ்வரன் ஒரு விவசாயி என்பதை வன இலாகவினரே ஒப்புக் கொள்கின்றனர். இதன் மூலம் அவர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் இல்லை என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது. அவர் கத்தியை காட்டி மிரட்டினார் என்றால் அவரை காலில் ஏன் சுட்டு பிடிக்கவில்லை என்ற கேள்விதான் முதலில் எழுகிறது. மேலும் ஈஸ்வரன் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுவதும் அவருடைய மார்பு பகுதியில் தோட்டா பாய்ந்ததாக சொல்லபடுவதும்தான் இதில் பெருத்த சந்தேகத்தையே எழுப்புகிறது.
எனவே ஈஸ்வரனின் குடும்பத்தினரும், உறவினர்களும் திட்டமிட்டே அவர் கொல்லப்பட்டு இருக்கிறார் என்று கூறும் குற்றச்சாட்டை எளிதில் புறந்தள்ளி விட முடியாது. தவிர வனப்பகுதியில் விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் தன் பாதுகாப்பிற்காக கூட விவசாயி ஈஸ்வரன் கத்தியை எடுத்து வந்திருக்கலாம்.
எப்படி பார்த்தாலும் அவரை ஏன் வனவர் திருமுருகன் காலில் சுட்டு பிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்ற கேள்விதான் மேலோங்கி நிற்கிறது.
இது தொடர்பாக திமுக அரசு தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பும். இல்லையென்றால் வனத்துறையினரால் விவசாயி சுட்டுக் கொல்லப்பட்ட துயர நிகழ்வு திமுக அரசுக்கு அவப்பெயரைத் தருவதாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“நானும் ஒரு விவசாயிதான்” என்று அவ்வப்போது பெருமையோடு கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!