காசோலை மோசடி வழக்கு ; மறைந்த நடிகர் சிவாஜி மகன் மற்றும் பேரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு

Author: Babu Lakshmanan
28 November 2022, 9:10 pm

சென்னை ; காசோலை மோசடி வழக்கில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மகன், பேரனுக்கு சைதாப்பேட்டை கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களில் ஒருவர் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களது நிறுவனம், மயிலாப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் தொழில் ரீதியாக தொடர்பு வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு வியாபார நடவடிக்கைக்காக ரூ.15 லட்சத்திற்கான 2 காசோலையை துஷ்யந்த் கொடுத்ததாகவும், ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் காசோலைகள் இரண்டும் திரும்பி வந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம், வேண்டுமென்றே காசோலை அளித்து ஏமாற்றி உள்ளதாகக் கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், இந்த பணத்திற்கு ராம்குமார் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

ஆனால், உத்தரவாதப்படி பணம் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி, தந்தை ராம்குமார் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட்டை நீதிபதிகள் பிறப்பித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

  • Sanjana Krishnamoorthy director debut இயக்குனராக களமிறங்கும் லப்பர் பந்து நடிகை…குதூகலத்தில் கோலிவுட்..!