சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கு; உடனே பதிலளிக்க வேண்டும்; தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு கோர்ட் உத்தரவு
Author: Sudha17 July 2024, 9:50 am
சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.அழகர்சாமி என்பவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.இதில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வாதிடும் போது
இந்த வழக்கானது 2018ல் தாக்கல் செய்யப்பட்டது என குறிப்பிட்டார் மேலும் இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் ஐந்து மாநிலங்களுக்கு, 2019ல் உத்தரவிட்டது. இந்த வழக்கில் பஞ்சாப் அரசு மட்டும் பதில் தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழகம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் இதுவரை பதில் தாக்கல் செய்யவில்லை.
இந்த வழக்கில் ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க, தமிழகம் உட்பட, நான்கு மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடைசி வாய்ப்பு அளித்துள்ளது. அவ்வாறு பதில் தாக்கல் செய்யாவிட்டால், 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, எச்சரித்துள்ளது
அபராதத் தொகை மிகவும் குறைவு என்றாலும், தங்களுடைய பொறுப்பை இந்த மாநிலங்கள் உணர்வதற்காக இது விதிக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை, நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் நிலவரம் தொடர்பாக, தனியாக துணைக்குறிப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட அமர்வு, அதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.