தமிழகத்தை மீண்டும் உலுக்கும் கொரோனா.. ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?
Author: Hariharasudhan14 October 2024, 11:33 am
தமிழகத்தில் ஒரே நாளில் 4 பாதிப்புகள் உள்பட 12 நாட்களில் 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் கொரோனா என்னும் கோவிட் 19 (Covid – 19) தொற்று கண்டறியப்பட்டது. அப்போது, சீனாவின் ஒரு மாகாணமே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, அடுத்த 3 மாதத்துக்குள் ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவத் தொடங்கியது. தொடர்ந்து, இந்தியாவிலும் கொரோனா வேகமாகப் பரவியது.
ஐந்திலக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை இருந்து படிப்படியாக குறையத் தொடங்கியது. இதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, பயணத்தில் கட்டுப்பாடுகள், தனி வார்டுகள், மருத்துவக் கட்டமைப்பு என பல வழிவகைகள் செய்யப்பட்டன. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் ரயில் பெட்டிகளும் கொரோனா படுக்கையாக பயன்படுத்தப்பட்டன. எனவே, ஒற்றை இலக்கத்திற்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் வந்தது.
இதனிடையே, கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளும் இந்திய மக்களுக்கு மத்திய அரசால் இலவசமாக போடப்பட்டது. அதேநேரம், இந்த தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களே வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, உள்நாட்டில் வருவதற்கும் அனுமதி கிடைக்கப்பட்டனர். இவ்வாறு பல தடைகளைத் தாண்டி கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போதைய சூழலில் கொரோனா உருமாற்றங்கள் அடுத்தடுத்து வந்தாலும், இந்தியா அதற்கான பாதுகாப்புக் கவசத்திலே இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 12 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காய்கறி வெட்டுற சாப்பிங் போர்டுல இவ்வளவு பெரிய ஆபத்து மறைந்து இருக்குதா…???
அதிலும் குறிப்பாக, கடந்த அக்டோபர் 11ஆம் தேதி சென்னை, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் 67 பேரிடம் சோதனை மேற்கொண்டதில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இருப்பினும், இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், கொரோனா தொற்று கட்டுக்குள்ளே உள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேநேரம், கேரளாவில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அடிக்கடி வருவதால் மாநில எல்லையில் தீவிர சோதனை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.