மகளிர் உரிமைத் தொகை… ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனைகள் விதிப்பு ; திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிருப்தி..!!

Author: Babu Lakshmanan
13 July 2023, 5:59 pm

தமிழகத்தில் பாஜக அண்ணாமலையின் நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லுக்கு இன்று 13.07.23 வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது. நடைபயணம் செல்வது அவரது உரிமை. தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்றுக் கொள்ள முடியாத பல நிபந்தனைகள் உள்ளது.

ஆகவே, தமிழக அரசு நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் பெரியசாமி சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பருத்தியை கொள்முதல் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடையாது. ஆகவே பருத்தி விவசாயிகளை காக்க தமிழக அரசு பருத்தியை கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண்டும். தமிழகத்தில் தக்காளி விலை உயர்வுக்கு கடந்த சாகுபடி யின் போது போதிய விலை கிடைக்காததால், அதிகளவு இந்த முறை சாகுபடி செய்யப்படவில்லை. இதனால், தக்காளி விலை உயர்ந்துள்ளது. விலை ஏற்றம் மற்றும் விலை குறைவை கட்டுப்படுத்த தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து வியாபாரம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்பதால் சாகுபடி செய்வார்கள்.

அதேபோல், பொதுமக்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். அப்போது தான் சம நிலை ஏற்படும். ஆகவே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அரசு முன் வர வேண்டும். தமிழ்நாட்டில் விலை இல்லா அரிசியை ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு ஒரு கிலோ அரிசி 20க்கு வாங்கி, இலவசமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது கூடுதலாக அரிசி வேண்டும் என்றால் வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஓபன் டெண்டர் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு கிலோ அரிசியை 31 ரூபாய்க்கு மத்திய அரசு வழங்குகிறது. அவர்களிடமிருந்து கூடுதல் விலை 50க்கு வாங்கிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. விலை இல்லா அரிசியை வாங்கி சாப்பிடும் ஏழை எளிய மக்களின் வயிற்றில் மத்திய அரசு அடிக்கிறது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் அரிசி விலை பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி சட்டம் ஒழுங்கை சீர்கேடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மணிப்பூரில் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனை பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியோ கண்டு கொள்ளவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடுவதற்கு அடிப்படை காரணமே பாரதிய ஜனதா தான்.

குறிப்பாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலை அரசியலாக்கி வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருவது பாரதிய ஜனதா கட்சி தான். இந்துக்களை தவிர பழனி முருகன் கோவிலுக்கு வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் வரக்கூடாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. பாஜகவின் இந்த செயல் வன்மையான கண்டனத்துக்குரியது ஆகும். தமிழக அரசு ஒரு பக்கம், ஆளுநர் ஒரு பக்கம் என்ற செயல்பாடு இருக்கும்பொழுது, தமிழகத்தில் அரசு செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும். தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ரவி பார்த்து வந்துள்ளார்.

இதற்குப் பின்பாவது தனது போக்கை மாற்றிக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறோம். ஆளுநர் நடவடிக்கை பின்னால் மோடியும், அமித்ஷாவும் உள்ளனர் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. மத்திய அரசு, மோடி, அமித்ஷா பின்புலம் இருப்பதால்தான், இவ்வாறு ஆளுநர் ரவி பேசி வருகிறார். ஆளுநர் செயல்பாடு பற்றி தமிழக முதல்வர் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக சுதந்திரமான முடிவை குடியரசு தலைவர் எடுக்க வேண்டும். ஆளுநரை மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.

  • Ilaiyaraaja blesses Arivu marriage திடீரென காதலியை கரம் பிடித்த இளம் பாடகர்…ஓடி சென்று வாழ்த்திய இளையராஜா…!