திமுக அரசு மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்.. டெல்லியில் இருந்து திரும்பியவுடன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காத்திருக்கும் புதிய நெருக்கடி…!!
Author: Babu Lakshmanan1 April 2022, 5:26 pm
இனிப்பில் இருந்து ஆரம்பம்
தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது முதலே அடிக்கடி சர்ச்சையில் சிக்கியவர், ராஜகண்ணப்பன். கடந்த அக்டோபர் மாதம், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகள் வாங்குவதற்கு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது. அதில் 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்கிற கடும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தியதும் அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் மூலம் மட்டுமே தீபாவளி இனிப்புகள் வாங்கப்பட வேண்டும் என்று அனைத்து அரசு துறையினருக்கும் தமிழக அரசு உத்தரவிடும் நிலையும் ஏற்பட்டது.
அடுத்த செக் நடராஜன்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ராஜகண்ணப்பனின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை துணை போக்குவரத்து ஆணையர் நடராஜன் அலுவலகத்தில்
நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் கட்டுக் கட்டாக 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடராஜன் திருநெல்வேலிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
ஆனால் அந்த அதிகாரி மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் முயற்சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாதி பிரச்சனை
இந்த பிரச்னைகளே ஓயாத நிலையில் ராஜ கண்ணப்பன், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக இன்னொரு சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக ராஜேந்திரன் கடந்த 28-ந்தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டி. அளித்து பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தினார்.
அவர் மனம் குமுறி அழுத அந்த காட்சிகள் சமூக ஊடகங்களிலும் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
வட்டார வளர்ச்சி அதிகாரி ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன கதி ஏற்படும்?… என்று சமூக ஆர்வலர்களும் குரல் எழுப்பினர்.
இலாகா மாற்றம்
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில்தான், முதலமைச்சர் ஸ்டாலின்
அண்மையில் அமைச்சர் ராஜ கண்ணப்பனை போக்குவரத்து துறையிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ராஜ கண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நல துறைக்கு மாற்றிய விவகாரமும் சர்ச்சையைக் கிளப்பிஉள்ளது. சாதியைச் சொல்லி திட்டிய அமைச்சரை
பதவி நீக்கம் செய்யாமல் சமூகநீதியைக் காக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றுவதா? என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனமும் தெரிவித்தன.
பாஜக கேள்வி
இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆங்கில செய்தி சேனல் ஒன்றின் பெண் நிருபர் ராஜகண்ணப்பனிடம் போக்குவரத்துத் துறையில் சென்னை துணை ஆணையராக இருந்த நடராஜனுக்கு எதிராக லஞ்ச புகாரில் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டபோது, அதற்கு பதில் அளிக்காமல் கோபத்தில் அவருடன் வந்த கேமராமேன் வைத்திருந்த கேமராவை தட்டி விட்டுச் சென்ற ஒரு வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி ராஜ கண்ணப்பனின் இமேஜை மேலும் டேமேஜ் செய்துள்ளது.
இதனிடையே பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “அரசு ஊழியர் ராஜேந்திரனை சாதி ரீதியிலாக பேசி அவமானப்படுத்திய அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பட்டியலின மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளதாக கூறும் திருமாவளவன் வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சி இதை ஆதரிக்கிறதா?… கம்யூனிஸ்டுகளின் கதறல் காணாமல் போனது ஏன்?” என்று கேட்டிருந்தார்.
மார்க்சிஸ்ட் கொந்தளிப்பு
அவருடைய இந்தக் கேள்வி கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதோ என்னவோ தெரியவில்லை. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது தனது ஆவேசத்தை காட்டினார்.
“அமைச்சர் ராஜ கண்ணப்பன் விவகாரத்தில் முதலமைச்சர் உடனே கவனம் செலுத்தியது பாராட்டுக்குரிய செயல். ஆனால், ராஜ கண்ணப்பனை துறை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா? அவர் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்டக் குற்றம். அந்தச் சட்டத்தின்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிஓவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?” என்று காட்டமாக கேள்வி
எழுப்பியுள்ளார்.
பா.ரஞ்சித் காட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அடிக்கடி பாராட்டி பேசும் இயக்குனர் பா.ரஞ்சித்தும் இந்த விவகாரம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கி இருக்கிறார். அமைச்சர் கண்ணப்பனின் பெயரைக் குறிப்பிட்டு கொட்டும் வைத்துள்ளார்.
அவர் தனது பதிவில், “சாதி வெறி இந்தியர்களின் இயல்பு மனநிலை! தமிழர்களுக்கு? தெலுங்கர்களுக்கு? அட எந்த மொழி பேசுபவர்களுக்கும் பிறப்பின் வழி கிடைத்த மூலதனம்(அயோக்கிய தனம்) ! சாதியை அறிந்தவர், எதிர்ப்பதன் மூலமாக சமூக நீதி அமைக்க முயற்சிக்கிறார்! அறியாதவன் திரு. ராஜ கண்ணப்பன் ஆகிறார்!” என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.
நடவடிக்கை இல்லை
இப்பிரச்னை குறித்து, அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துகள்:
“தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்பு அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவது தொடர்கதை ஆகிவிட்டது. கடந்த சில நாட்களில் மட்டும் மூன்று மிகப்பெரிய சர்ச்சைகளில் அவர் சிக்கிக் கொண்டார். எதிர்க்கட்சிகள் நடத்திய 2 நாள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின்போது.
தமிழகம் முழுவதும் வழக்கம்போல் அரசு பேருந்துகள் ஓடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு மாறாக போராட்டத்தின் முதல் நாளான கடந்த 28-ம் தேதி மாநிலத்தில் 90 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதற்கு காரணம் தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த கண்ணப்பன் எந்த உறுதியான முடிவையும் எடுக்காததுதான் என்கிறார்கள். இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் கடும் அவதிப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
அன்று பல மாவட்டங்களில் இயக்கப்பட்ட தனியார் பஸ்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களும் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த வேதனை காட்சிகளையும் காண முடிந்தது.
ரயில், பஸ் நிலையங்களில் பயணிகள் முடங்கி கிடக்கும் நிலையும் ஏற்பட்டது. ஓடிய ஆட்டோக்கள், கால் டாக்சிகள், ஷேர் ஆட்டோக்களில் இரு மடங்கு கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்ததால் அனைத்து மாவட்டங்களிலும் பயணிகள் நிலைமை பரிதாபமாகிப் போனது.
மாநில முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது துபாயில் இருந்தார். மறுநாள், அதாவது 29ம் தேதி அவர் சென்னை திரும்பும்போதும் இதே நிலை நீடித்தால் திமுக அரசுக்கு மக்களிடம் மேலும் கெட்ட பெயர் ஏற்படும் என்று கருதித்தான் அன்றைய தினம்
அனைத்து அரசு பேருந்துகளையும் இயக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
அதனால் கடந்த 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகம் ஓரளவு இயல்பு நிலைக்கும் திரும்பியது.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்
ஏற்கனவே வட்டார வளர்ச்சி அதிகாரியை அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அவர் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் இந்த நடவடிக்கை போதாது. அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் தற்போது போர்க்கொடி உயர்த்தி இருக்கிறது.
அதுவும் சமூகநீதி பற்றி உரக்க பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இந்த விவகாரத்தில் மௌனம் சாதிப்பது ஏன்? என்று பாஜக கேள்வி எழுப்பிய பிறகே அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இப்படி அதிரடி காட்டியிருக்கிறார்.
தற்போது அமைச்சர் கண்ணப்பன், பெண் நிருபருடன் வந்த புகைப்படக் கலைஞர் வைத்திருந்த கேமராவை தட்டிவிட்ட நிகழ்வும் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் விசிக, காங்கிரஸ் கட்சிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் இதுபோல ஒரு சம்பவம் நடந்திருந்தால் கேஎஸ் அழகிரியும், திருமாவளவனும் அப்படியே பொங்கி எழுந்து இருப்பார்கள். அனல் பறக்கும் வகையில் பக்கம் பக்கமாக கண்டன அறிக்கையும் வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இந்த சம்பவம் நடந்திருப்பது தமிழகம் என்பதால் இப்போது அவர்களின் நிலைமைதான் பேசு பொருளாக மாறிப்போய்விட்டது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன், வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டதற்கு அரசியல் ஆர்வலர்கள் கூறும் காரணங்கள் சிந்திக்க கூடியவைதான்!