என் பிறந்தநாள் குறித்து விமர்சனம் வந்துவிடக் கூடாது : தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல்!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2023, 11:25 am
திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஒன்றரை ஆண்டுகாலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள், தொடர்ந்து முன்னெடுக்கும் செயல்பாடுகள் இவற்றால் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு.
தமிழ்நாடு அத்தகைய நிலையை அடைவதுடன், இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மைச் சிதையாமல், ஒருமைப்பாடு குலையாமல், மதநல்லிணக்கம் மிக்க ஜனநாயகம் தழைத்தோங்கும் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கமாகும்.
என்னுடைய 70-ஆவது பிறந்தநாள் என்பது அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதைத்தவிர, வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை.
பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப்போதல்ல, இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
எளிமையான முறையில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை – எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும்.
கழகத்தினர் எது செய்தாலும், துரும்பைத் தூணாக்கி விமர்சனங்களுக்குக் காத்திருக்கும் எதிர்த்தரப்பினருக்கு கொஞ்சமும் இடம்தராமல் எளிய முறையில் நிகழ்வுகளை நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கழகத்தின் தலைவர் என்ற முறையில்தான் என்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு இந்தளவில் அனுமதி வழங்குகிறேன். அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா என்றால் இந்தியாவே அதனை கவனிக்கும்.
அவரது பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாள் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டம், ஏடுகளின் தலைப்புச் செய்தியாக மாறும். தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த அன்புச் சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள் தலைவரின் பிறந்தநாள் விழாவை எத்தனை சீரும் சிறப்புமாக நடத்துவார் என்பதை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சிலே எத்தனையோ நினைவலைகள்!