கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ; சென்னையில் 20% கூடுதல் மழை… சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
11 November 2022, 3:48 pm

கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய நிபுணர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :-
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிவந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் தமிழகம் புதுவையை நோக்கி நாளை காலை நகரக்கூடும். பின்னர் தமிழக, கேரள பகுதியை கடந்து அரபிக் கடலை நோக்கி செல்லும்.

கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் (கொள்ளிடம்) 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.அடுத்து வரும் மூன்று தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் பரவலான மழை பெய்யக்கூடும்.

அடுத்துவரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும். சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ,திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரையில் குமரி கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்க கடல், பகுதிகள் மற்றும் அதன் ஒட்டி உள்ள பகுதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இன்றும் நாளையும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் அதன் புறநகரை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் ,ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது. கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை.

சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் அதிகப்படியாக 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வட கிழக்கு பருவ மழை காலத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் 247 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.இயல்பாக 254 மில்லி மீட்டர் மழை இருக்கும். இது இயல்பை விட 3% சதவீதம் குறைவு.

சென்னையில் பதிவான மழையின் அளவு 509 மில்லி மீட்டர், இயல்பான அளவு 424 மில்லி மீட்டர் இது இயல்பை விட 20% அதிகம் ஆகும், எனக் கூறியுள்ளார்.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 510

    0

    0