சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம் ; ‘சிவ சிவா..’ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 10:10 am

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடலூரில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.

அதன்படி இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா, கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகளின் தேர்கள் வீதிகளில் வலம் வருகிறது. இதில், சிவ சிவா…கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?