கடலூர் மாவட்டமே காணாமல் போயிடும்… சதியை முறியடிக்கும் வரை பா.ம.க. ஓயாது : அன்புமணி வாய்ஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 March 2023, 4:59 pm

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களும், விரைவில் செயல்படுத்தப்பட இருக்கும் அவற்றின் விரிவாக்கங்களும் கடலூர் மாவட்டத்தின் அழிவுக்கு வழிகோலிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரு நிலக்கரித் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

மொத்தம் 66,000 ஏக்கர் பரப்பளவிலான அந்த நிலக்கரி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மாவட்டம் அழிந்துவிடும். மத்திய அரசு புதிதாக செயல்படுத்தத் துடிக்கும் இரு நிலக்கரித் திட்டங்களில் முதன்மையானது சேத்தியாத் தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம்.

2-வது… வீராணம் நிலக்கரித் திட்டம் மற்றும் பாளையம் கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகும். இந்த 2-வது திட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

மொத்தம் 45,000 ஏக்கரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. என்.எல்.சியும், தனியாரும் போட்டிப்போட்டுக் கொண்டு பூமியை பிளந்து நிலக்கரி வளத்தைக் கொள்ளையடித்தால் கடலூர் மாவட்டம் வெகு விரைவில் அழிந்து விடும்.

ஆனால், தமிழ்நாடு அரசுக்கு அத்தகைய பதற்றமும், கவலையும் கிஞ்சிற்றும் இல்லை. அதனால் தான் கடலூர் மாவட்டத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நிலக்கரி வளத்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வு நடத்த அனுமதி கோரப்பட்டால், கண்களை மூடிக் கொண்டு அனுமதி வழங்கிக் கொண்டிருக்கிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து எந்த கவலையும் படாமல் அவர்களின் நிலங்களை பறித்து என்.எல்.சி.க்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் பேரழிவுக்கு தமிழ்நாடு அரசும் துணை போய்க்கொண்டிருக்கிறது.

நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்காக ஓர் அடி நிலத்தைக் கூட கையகப்படுத்தித் தரமாட்டோம் என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

அத்துடன் என்.எல்.சி. நிறுவனத்தை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்கி வரும் என்.எல்.சி. நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக போராட்டங்களைத் தொடங்கியுள்ள பா.ம.க. முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்காது.

கடலூர் மாவட்ட மக்களையும், மண்ணையும் காப்பதற்கான போரில் எந்த எல்லைக்கும் செல்லவும், எத்தகைய தியாகத்தைச் செய்யவும் பா.ம.க. தயங்காது.

என்.எல்.சி இல்லாத கடலூர் மாவட்டம் தான் பா.ம.க.வின் நோக்கம். அதை பா.ம.க. அடைந்தே தீரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!