கண்ணீர் மல்க மாணவியின் உடல் நல்லடக்கம் ; கிராமமே திரண்டு வந்து அஞ்சலி…மகளின் சாவுக்கு நீதி கிடைக்கும் என தந்தை நம்பிக்கை!!

Author: Babu Lakshmanan
23 July 2022, 12:11 pm

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடல் சொந்த ஊரில் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கணியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வந்தவர் ஸ்ரீமதி. இவர், கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சட்டப்போராட்டம் நடத்திய அவரது பெற்றோர், சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக நேற்று உறுதியளித்தனர்.

அதன்படி, இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் மாணவியின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலை கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். பின்னர், மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

முன்னும், பின்னும் காவல்துறை வாகனங்கள் பாதுகாப்போடு கொண்டு செல்லப்பட்ட மாணவியின் உடல், சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு சொந்த கிராம மக்கள் தாரை தாரையாக வந்து அஞ்சலி செலுத்தினர். மாணவியின் மரணத்தால் அந்த கிராமமே கண்ணீர் கடலில் தத்தளித்து வருகிறது.

பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் முடிவில் சிக்கல் இருந்தால், மீண்டும் பரிசோதனை செய்ய ஏதுவாக, புதைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சுடுகாட்டில் குழியும் தோண்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலிக்கு பிறகு மாணவியின் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், சுடுகாட்டில் சடங்கு, சம்பிரதாயங்களுடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடலை அடக்கம் செய்யும் போது, பெற்றோர், உறவினர் மற்றும் பொதுமக்கள் என அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறினர்.

மகளுக்கு இறுதி மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை ராமலிங்கம், “எனது மகள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறாள். சிபிசிஐடி விசாரணை மீது நம்பிக்கை உள்ளது; மகளுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். என் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நிகழக் கூடாது. இதுவே முதலும், முடிவுமாக இருக்க வேண்டும். இனி இதுபோன்று நிகழக் கூடாது. ” எனக் கூறினார்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 624

    0

    0