காவல்நிலையத்தில் விசாரணைக் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் : 6 போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!!
Author: Udayachandran RadhaKrishnan28 November 2022, 3:54 pm
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக தலைமைச் செயலக காலனி போலீசார் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி கைது செய்தனர்.
அன்று இரவே விசாரணையின்போது விக்னேஷ் உயிரிழந்தார். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், விக்னேஷை காவல் நிலையத்தில் போலீசார், கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமை செயலக காலனி காவல் நிலைய, காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை கைது செய்த சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 6 போலீசாருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 127 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 290 ஆவணங்கள், 64 சான்று பொருட்கள் குறித்த விவரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.