குளமா…? இல்ல குடியிருப்பு வளாகமா..? மூழ்கிய வீடுகள்… மிதக்கும் வாகனங்கள்.. சென்னையில் சோகம்..!!
Author: Babu Lakshmanan4 December 2023, 10:49 am
சென்னையில் அடித்து ஊற்றும் கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. இந்தப் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இன்று அதிகாலையும் கனமழை நீடித்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும், தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அநாவசியமாக பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குடியிருப்புகளில் புகுந்துள்ள வெள்ளநீர் வாகனங்களை அடித்துச் செல்வதால், அதன் உரிமையாளர்கள் நெஞ்சை அடித்துக் கொண்டு கதறுகின்றனர்.
அதேபோல, சென்னை விமான நிலையமும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுதளம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால் காலை 11.40 வரை விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக சென்னை உருக்குலைந்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.