‘மிக்ஜாம்’ புரட்டி போட்ட தேர்தல் கணக்கு!…. 6 தொகுதிகளை திமுக இழக்கிறதா…?

Author: Babu Lakshmanan
11 December 2023, 10:03 pm

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் இதுவரை எந்தவொரு காலத்திலும் சந்திக்காத மிகப்பெரிய துயரை அனுபவிக்க நேர்ந்தது.

ஏழை, எளியவர்கள், விளிம்பு நிலை மக்கள், நடுத்தர வகுப்பினர், வசதி படைத்தவர்கள் என எந்த பாகுபாடும் இன்றி அனைவருமே நான்கு, ஐந்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகக் கொடுமையான சூழலுக்கும் தள்ளப்பட்டனர்.

அதுவும் கைக் குழந்தைகள், உடல் நலம் குன்றியோர் மற்றும் முதியோர்கள் இருந்த வீட்டினர் நிலையோ மிகப் பரிதாபம். தரைத்தளத்தில் வசித்தவர்களின் நிலைமையோ இன்னும் படுமோசம். அவர்கள் அரசின் நிவாரண முகாம்களை தேடி செல்லும் நிலையும், முதல் தளவாசிகளின் கருணை பார்வையையும் பெற வேண்டிய நெருக்கடியும் உருவானது.

ஏனென்றால் சென்னை நகருக்குள் மட்டுமின்றி, அதன் சுற்று வட்டாரப் புறநகர் பகுதிகளிலும் 7 முதல் 10 அடி வரை மழைநீர் புகுந்து 4 லட்சத்துக்கும் அதிகமானவர்களின் வீடுகளை உண்டு இல்லை என ஒரு வழி பண்ணி விட்டது.

இதைவிட ஆச்சரியளிக்கும் விஷயம் என்னவென்றால் இந்த 4 மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சென்னை மாநகர மேயர், கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என யாரையுமே அங்கு வசிக்கும் மக்கள் உள்ளே நுழைய அனுமதிக்கவே இல்லை.

மீறிச் செல்ல முயன்றபோது அவர்களை முற்றுகையிட்டு, “20 சென்டிமீட்டர் மழைக்கு மேலே பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத அளவிற்கு வடிகால் வசதிகளை செய்திருக்கிறோம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் சொன்னாரே?.. அதெல்லாம் பொய்யா?… 4000 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை நகர மழைநீர் வடிகால் பணிகள் என்ன ஆனது? என்று சரமாரி கேள்விகளை கேட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி கடும் கோபத்தைத்தையும் வெளிப்படுத்தினர். இதை ஆளும் கட்சியான திமுக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, நமது ஆட்சியில் நமக்கு எதிராகவே மக்கள் கொதித்து எழுகிறார்களே, என்று அதிர்ச்சிதான் அடையத்தான் முடிந்தது. இந்த காட்சிகள் எல்லாம் டிவி செய்தி சேனல்களிலும், சமூக ஊடங்களிலும் மாநிலம் முழுவதும் வெளியாகி பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.

சில இடங்களில் எந்தக் கட்சிக்காரர்களும் நாங்கள் வசிக்கும் பகுதியை எட்டிப் பார்க்கவே இல்லை. ரெண்டரை வருஷத்துக்கு முன்னே தேர்தலுக்கு ஓட்டு கேட்க வந்ததோடு சரி. பிறகு வரவேயில்லை என்று கடும் கோபத்தையும் வெளிக்காட்டினர். என்றபோதிலும் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது காட்டிய அளவிற்கு மற்ற கட்சிகளிடம் அந்த வெறுப்புணர்வு தென்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மிக்ஜாம் புயல் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு சோதனைக்களம் போல அமைந்து இருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய ஆறு தொகுதிகளிலும் 2019 தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் லட்டு போல வெற்றியை சுவைத்து இருந்தன.

ஆனால் இந்த முறையும் அப்படி நடக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது. ஏனென்றால் வெள்ளம் புகுந்த வீடுகளில் வசித்தவர்கள் டிவி சேனல்களுக்கு அளித்த பேட்டிகளில் கொதித்தெழுந்து சொன்ன ஒரே கருத்து,”எங்களை திமுககாரர்கள் யாரும் சந்தித்து பேசி ஆறுதல் கூறவும் இல்லை, பால், ரொட்டி, உணவு பொருட்கள் வழங்கவும் இல்லை. ஆனால் தேர்தலில் ஓட்டு மட்டும் கேட்க வந்து விடுவார்கள். இனி அவர்களுக்கு ஓட்டு போடவே மாட்டோம்” என்று சபதம் எடுக்காத குறையாக கொதித்ததுதான்.

இப்படி நான்கு மாவட்ட மக்களும் கொந்தளிப்பை கொட்டியதால்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரில் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும்
தலா 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக அறிவிக்கும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே 2019 தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த 57சதவீதம் ஓட்டுகள் என்பது திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த இரண்டரை ஆண்டுகளில் 15 சதவீதம் வரை சரிந்து போய் விட்டது என்று சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் திமுக கூட்டணிக்கு கிடைத்து வந்த சிறுபான்மையினரின் ஓட்டுகளும் நான்கு சதவீதம் வரை அதிமுகவிற்கு கிடைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த கணக்கின்படி பார்த்தால் திமுக கூட்டணி என்னதான் வலுவாக இருந்தாலும்
38 சதவீத ஓட்டுகளுக்கு மேல் பெற முடியாத சூழலும் உருவாகிவிட்டது.

இந்த நிலையில்தான் மிக்ஜாம் புயலும் திமுகவுக்கு மேலும் பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

“இது எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு சாதகமான சூழலையே ஏற்படுத்தும்”
என்று மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் வட மாவட்டங்களில் பாஜகவுக்கு வலுவான வாக்கு வங்கி கிடையாது. இப்போதுதான் அக்கட்சி வளர்ச்சி காண தொடங்கி இருக்கிறது. தவிர
டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோருக்கும் இப்பகுதிகளில் செல்வாக்கு என்ன என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி. ஒருவேளை பாஜக தனது கூட்டணிக்குள் பாமகவை கொண்டு வந்தால் அதன் மூலம் ஓரளவு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்பதுதான் எதார்த்த நிலை.

அதேநேரம் கூட்டணி கட்சிகள் வெளியேறாமல் இருந்தாலும் கூட அவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு பெரிய அளவில் வெற்றியை குவித்துவிட முடியாது என்பதை திமுகவும் நன்றாக உணர்ந்துள்ளது. அதனால்தான் பாமகவை எப்படியாவது தனது கூட்டணிக்குள் வளைத்துப் போட திமுக மேலிடம் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களில் விளிம்பு நிலையில் உள்ளோர் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை தங்களது உடமைகளை இழந்துள்ளனர். நடுத்தர வகுப்பினர் கட்டில், மெத்தை, டிவி, பிரிஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை இழந்து ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை பறி கொடுத்துள்ளனர். இது தவிர தாங்கள் வைத்திருந்த இருசக்கர வாகனங்களை பழுது பார்க்க குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டிய நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

வசதி படைத்தவர்களோ தாங்கள் வாங்கிய கார்கள் வெள்ள நீரில் மூழ்கி விட்டதால் ஒரு காருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள், கார்களை இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் கூட அது எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பது தெரியவில்லை. அதேநேரம் வெள்ளத்தால் பழுதடைந்த கார்களை தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சர்வீஸ் சென்டர்களுக்கு எடுத்துச் செல்வதற்கே பதினைந்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவிடும் பரிதாப நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற இடர்ப்பாடுகளை உணர்ந்து கொண்டுதான் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிவாரணத் தொகையை 12 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து தாருங்கள் என்று திமுக அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆனால் இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி மத்திய அரசு எடப்பாடி பழனிசாமிக்கு நண்பர்கள் தானே, அவர் மத்திய அரசிடம் சொல்லி போதுமான நிவாரணத் தொகையை வாங்கி தந்தால் எங்களுக்கு கொடுக்க வசதியாக இருக்கும் என்று கேலியாக குறிப்பிட்டு இருக்கிறார்.

ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறினால் அது உண்மையாகிவிடும் என்பது போல அவருடைய பேச்சு உள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

அப்படி இருந்தும் கூட அமைச்சர் உதயநிதி உங்களுக்கு பாஜக நண்பர்கள்தானே என்று கூறுகிறார் என்றால் அதன் அர்த்தம் என்ன?… சிறுபான்மையினரின் ஓட்டுகள் முன்பு போல திமுக கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொண்டுதான் அதிமுகவையும், பாஜகவையும் உதயநிதி இப்படி கோர்த்து விடுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இதே கோயபல்ஸ் பிரச்சாரத்தை தற்போது விசிக தலைவர் திருமாவளவனும் கையில் எடுத்துள்ளார். மத்திய ஆளும் கட்சியோடு நட்போடு இருக்கும் அதிமுகவினர் அவர்களோடு பேசி தமிழக அரசு கேட்ட ஐந்தாயிரம் கோடி ரூபாயை பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதாவது அதிமுகவும் பாஜகவும் இன்னும் உறவில் தான் இருக்கின்றன என மறைமுகமாக சொல்கிறார். கூட்டணியை விட்டு வெளியேறிய பின்பு அதிமுகவால் அது சாத்தியமில்லை என்பது தெரிந்தும் கூட இப்படி திருமாவளவன் சொல்கிறார் என்றால் அதன் உள்ளர்த்தம் அவருக்கும் சிறுபான்மையினரின் ஓட்டுகள் இனி திமுக கூட்டணிக்கு முழுமையாக கிடைக்காது என்பதை புரிந்து கொண்டதாகத்தான் இருக்க முடியும்.

ஏனென்றால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினால் அதை முதல் ஆளாக நான் வரவேற்பேன் என்று 10 மாதங்களுக்கு முன்பு சொன்னவர்தான் இந்த திருமாவளவன். அதேபோல வெளியேறியதும் திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதற்கு வாழ்த்து தெரிவித்தவரும் அவர்தான். ஆனால் இப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார்.

அதிமுக- பாஜக கூட்டணி முறிந்தது முறிந்தது தான். இனி இரு கட்சிகளும் ஒருங்கிணைய வாய்ப்பே இல்லை என்பதுதான் அதிமுகவின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது. அதனால் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இது குறித்து பேசுவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களை பொறுத்தவரை திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அவர்களது தொகுதிக்குள்ளேயே பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள நிலையில் வெள்ள நிவாரண உதவிகளை அதிமுக தீவிரமாக முன்னெடுத்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதற்குக் காரணம் அக் கட்சியின் வலிமையான கட்டமைப்புதான். அதற்கடுத்து தமிழக பாஜக நிவாரண பொருட்களை வழங்கியதை குறிப்பிடவேண்டும். இந்த இரு கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் எல்லாமே பெயரளவிற்குத்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கின என்பதுதான் கள நிலவரம்.

2024 தேர்தலுக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட
மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து விடலாம் என்று திமுக நினைத்தாலும் அது கை கொடுக்குமா என்பது சந்தேகம்தான். இந்த நான்கு மாவட்ட வாக்காளர்களும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்தாலோ அல்லது வாக்குப்பதிவு தினத்தன்று நோட்டாவுக்கு வாக்களித்தாலோ அதனால் பெரிதும் இழப்பை சந்திக்க போவது திமுகவாகத்தான் இருக்கும்” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.!

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 365

    0

    0