தினந்தோறும் அதிகரிக்கும் தீக்குளிக்கும் முயற்சி… திமுக அரசு இயங்குகிறதா என சந்தேகம்… அண்ணாமலை விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan18 May 2022, 7:30 pm
சென்னை : கிருஷ்ணகிரியில் சாதி சான்றிதழ் கேட்டு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தை குறிப்பிட்டு, திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம் போல கடந்த திங்கட்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒரு தம்பதியினர் தனது மகள் மற்றும் மகனுடன் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது, அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற 4 பேரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் போச்சம்பள்ளி அருகேயுள்ள செல்லக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக், மங்கம்மாள் தம்பதியினர் என்பது தெரிய வந்தது. அவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் முத்தமிழ் என்ற மகனும், 10ம் வகுப்பு படிக்கும் தமிழ்வழி என்ற மகளும் உள்ளனர். தற்போது 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறுவதால் மகளிடம் பள்ளியில் சாதி சான்றிதழ் கேட்பதாகவும், இல்லையேல் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
பன்னியாண்டி சமுதாயத்தை நாங்கள் 10 ஆண்டுகளாக சாதி சான்றிதழ் கேட்டு போராடி வந்தும் யாரும் சான்றிதழ் வழங்காததால் குடும்பத்துடன் தீ குளித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்ததாக அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வீடியோவை குறிப்பிட்டு டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசு இயங்குகிறதா என்று மக்கள் சந்தேகம் எழுப்பும் வகையிலே அமைந்துள்ளது இந்த திமுக ஆட்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- அரசு இயங்குகிறதா என்று மக்கள் சந்தேகம் எழுப்பும் வகையிலே அமைந்துள்ளது இந்த திமுக ஆட்சி. தினம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு விரக்தியில் தீக்குளிக்கும் மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது! முதலமைச்சர் கவனம் செலுத்தி அரசு இயந்திரத்தை இயங்க வைக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.