பழனி கோவில் ராஜகோபுரம் சேதம் : ஆபத்து பக்தர்களுக்கா..? அரசுக்கா.?
Author: Udayachandran RadhaKrishnan2 October 2024, 7:16 pm
பார் புகழும் பழியிலே பங்குனி உத்திரமும், தைப்பூசமும் சிறப்பு பெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி அருள்பெரும் தலம் பழனியாகும்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாய் இருப்பது பழனி உள்ளது. பழநி சூழ் கழனி என வர்ணிக்கிறார்கள். பழனி அழகைக் காண்பதற்கு வெளி மாநிலம் மற்றும் அன்று வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.
பழனி மலைக்கோவில் ராஜகோபுரம் சேதமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடமுழுக்கு முடிந்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் புதுப்பிக்கப்பட்ட ராஜகோபுரம் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது.
மக்கள் மற்றும் அரசாங்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என்பது ஐதீகம் என்ற நிலையில் இந்த சம்பவம் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. பல கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மலைக்கோவில் மற்றும் சுற்றுப்பிரகாரங்களில் உள்ள கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.
இந்நிலையில் பழனி மலைக்கோவில் ராஜகோபுரத்தின் வலது ஓரத்தில் உள்ள பகுதி சேதமடைந்து இடிந்து விழுந்திருப்பது கண்டு பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மலைக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 21மாதங்களே ஆன நிலையில் ராஜகோபுரம் சேதமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும்.
கும்பாபிஷேகம் முடிந்து 21 மாதங்களே ஆன நிலையில் ராஜகோபுரம் இடிந்து விழுந்து இருப்பது ஆன்மிக வாதிகளிடம் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
செவ்வாய் உச்சம் பெற்ற ஸ்தலமான பழனி மலை கோவிலில், செவ்வாய் கிழமையான நேற்று ராஜகோபுரம் இடிந்து விழுந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பழனி திருக்கோவில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ராஜகோபுரத்தின் உச்சியில் உள்ள பகுதி சேதமடைந்து 25 நாட்கள் ஆகிவிட்டதாகவும், அதிக அளவில் குரங்குகள் இருப்பதால் குரங்குகள் கோவில் கோபுரத்தில் உள்ள பதுமைகள் மற்றும் சிற்பங்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் சேதமானால் மட்டுமே குற்றம்.
பதுமைகள் மற்றும் சிற்பங்கள் சேதம் ஆவது எவ்வித பாதிப்பும் இல்லை. உடைந்து விழுந்துள்ள ராஜகோபுரத்தின் ஒரு பகுதியை சரி செய்ய திருக்கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
கோயிலுக்கு உலகம் முழுதுமிருந்து பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். கோயிலில் 2023 ஜன., 27 கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக புனரமைக்கப்பட்ட ராஜ கோபுரம் வலது புற சுதை சிற்பம் யாழி பின்புறம் வளைவு உடைந்துள்ளது.
உடைந்த சுதை சிற்ப வளைவை ராஜகோபுரம் மீதுள்ள இடிதாங்கி கீழே விழாமல் தாங்கிப் பிடித்துள்ளது. ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் சுதை சிப்பம் மனிதர்களால் சேதப்படுத்த முடியாத உயரத்தில் உள்ளது.
இந்நிலையில் மின்னல் தாக்கியிருக்கலாம் அல்லது தரமற்ற பணிகளால் சேதமடைந்திருக்கலாம் . இதற்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என பக்தர்கள் தெரிவித்தனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது : கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. கோபுரங்கள், கலசங்கள், சுதை சிற்பங்கள் போன்றவற்றை புனரமைத்து புதுப்பிக்கத்தான் கும்பாபிஷேக பணி நடக்கிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு 8 மாதங்கள் ஆகியுள்ளது.
அதற்குள் சிற்பம் உடைந்திருக்கிறது என்றால் உடனடியாக ஹிந்து அறநிலையத்துறை இதனை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.உறுதிதன்மையை பரிசோதிக்க வேண்டும். குரங்கு அமர்ந்ததால் இப்படி நடந்து விட்டதென தேவஸ்தான நிர்வாகம் கூறியதாக ஒரு தகவல் பரவுகிறது.
இதுகுறித்து சோதிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோபுரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக புனரமைத்து பாலாலயம் செய்து கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
ஆகம விதிப்படி இதனை மேற்கொள்ள வேண்டும், பெரும்பாலன மக்கள் கோயிலுக்கு செல்லும் முன் கோபுரத்தை பார்த்து விட்டுதான் செல்வர். எனவே ஆகம விதிப்படி உரிய விதிமுறைகளைப் பின்றி கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். மற்ற கோபுரங்களின் தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றார்.
கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறுகையில், ‘‘ராஜகோபுரத்தின் சுதை சிற்பம் சேதமடைந்துள்ளதை ஆகம விதிகளுக்கு உட்பட்டு விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும்,’’ என்றார்.