திமுக ஆட்சிக்கு ஆபத்து… கவலை வேண்டாம்… முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan9 July 2023, 11:17 am
சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க எழுத்தாளர் இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, திராவிட இயக்கம் ஒரு கொள்கை குடும்பம். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். காலை சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை உதாரணம்.
வருகிற செப்டம்பர் 15ம் தேதி ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயன்பெற உள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிலருக்கு எரிச்சலையும், பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. நம்முடையை நலத்திட்டங்களை விமர்சிப்பவர்களை பார்த்து, நிறைய பதில் கேள்வி கேட்க முடியும்.
வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒருவருக்கு ரூ.15 லட்சம் வழங்கலாம் என்று 2014 தேர்தலுக்கு முன்பாக மோடி பேசினார்; ரூ.15 லட்சம் கூட வேண்டாம் ரூ.15 ஆயிரமாவது தந்தார்களா?. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது பாஜக நிறைவேற்றியுள்ளதா?
இந்திய நாட்டிற்கு இன்று ஆபத்து வந்துள்ளது. இந்த ஆபத்தில் இருந்து நாட்டினை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. நமது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் நாம் கவலைப்பட வேண்டாம். இம்மியளவும் பயப்படாமல் கொள்கை, லட்சியத்தை மனதில் வைத்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
பிரதமர் என்ற நிலையில் இருப்பதை மறந்து மோடி எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட யார் வரக்கூடாது என்பதில் கவனம் தேவை.
யார் ஆட்சி இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. நாட்டிற்கு நல்லதை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற எண்ணத்தோடு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன என அவர் கூறினார்.