பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்… தலைமறைவானார் அமர்பிரசாத் : தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan25 January 2024, 10:25 am
பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்… தலைமறைவானார் அமர்பிரசாத் : தனிப்படை அமைத்து தேடும் போலீஸ்!
சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் தேவி. தேவியின் தங்கை ஆண்டாள் பாஜக மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார்.
கடந்த 19ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை ஒட்டி சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவியையும், தங்கை ஆண்டாளையும் தாக்க தொடங்கியுள்ளனர்.
அப்போது அமர் பிரசாத் ரெட்டியிடம் பிரதமர் வருகையின்போது ஆட்களை அழைத்து வருவதற்காக நீங்கள் பணம் வாங்கி வந்து விட்டதாகவும், அதில் எங்களுக்கு பங்கு வேண்டும் எனவும் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்தனர்.
தொடர்ச்சியாக தாக்கிய போது தேவியின் மண்டை உடைந்து உடனடியாக பாரதிராஜா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும், 2 நாட்கள் வெளியே வருவதற்கு பயமாக இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறினால் உங்கள் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவோம் என ஸ்ரீதர் மிரட்டி உள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமர் பிரசாத் ரெட்டி கூறியதாக அவரது ஓட்டுநர் மற்றும் பாஜக நிர்வாகிகள் பெண் பாஜக நிர்வாகி மற்றும் சகோதரியை தாக்கிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள கோட்டூர்புரம் காவல்நிலைய காவல்துறையினர், அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள நிலையில் அவரது கார் டிரைவரை கைது செய்துள்ளனர்.