திமுகவில் தகுதியுள்ளவர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு : மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் எம்.பி. கனிமொழி உறுதி!!!
Author: Udayachandran RadhaKrishnan1 March 2022, 9:37 pm
உக்ரைனில் இந்திய மாணவர்கள் நிலை மிக மோசமாவதற்கு முன்பே மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திமுக மகளிரணி சார்பில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்படும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திமுக மகளிர் அணி கல்வி அறக்கட்டளையை கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழக முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதே பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுவதாகவும் அதன் தொடர்ச்சியாக தற்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர் பெண்களுக்கு பல திட்டங்களை அறிவித்துருப்பதாக புகழ்ந்தார்.
பேருந்தில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்திற்கு மட்டும் இதுவரை ஆயிரத்து 36 கோடி ரூபாயை தமிழ்நாடு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறினார். மேலும், தனது ஒரு மாத சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்தை திமுக மகளிர் அணி கல்வி அறக்கட்டளைக்கு அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
அதை தொடர்ந்து பேசிய கனிமொழி, பொது தளங்களில் ஆண்களை விட 10 மடங்கு அதிக உழைப்பு செலுத்தினால் மட்டுமே ஆண்களுக்கு நிகராக பெண்கள் அங்கீகரிக்கப்படும் நிலை சமூகத்தில் உள்ளது என கூறினார்.
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் போராட்டங்களால் இன்று கல்வி சாதாரணமாக அனைவருக்கும் கிடைக்க கூடிய நிலை உள்ளது. நீட் தேர்வு முறையை மத்திய பாஜக அரசு கொண்டு வந்து, நம் பிள்ளைகள் நமது மருத்துவ கல்லூரிகளில் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்கவே தமிழ்நாடு முதலமைச்சர் நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகிறார்.
தேசிய கல்வி கொள்கை நடைமுறைக்கு வந்தால், யாராலும் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். மத, சாதி, பாலின பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதே திமுகவின் நோக்கம்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால் தான், 7.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய கனிமொழி, உக்ரைனில் மிகவும் மோசமான நிலையில் இந்திய மாணவர்கள் தவித்து கொண்டிருப்பதாகவும், பல மாணவர்கள் உக்ரேனின் எல்லையில் நடந்தே சென்று அங்கிருந்து வெளியேற முடியாமல் உணவு இன்றியும் கடும் குளிரிலும் தவித்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
உக்ரேனில் சிக்கியுள்ள மாணவர்களை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மீட்டு இந்தியாவிற்கு பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.
இந்த பிரச்சனை இவ்வளவு மோசமாவதற்கு முன்பே ஏதாவது செய்திருக்க முடியும் என்றால் மத்திய அரசு செய்திருக்கலாம், தற்போது அங்குள்ள மாணவர்களை பாதுகாப்பாக மத்திய அரசு இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவில் தகுதியுள்ள அனைவருக்கும் நிச்சயமாக வாய்ப்புகள் கிடைக்கும் என அவர் கூறினார்.