எம்ஜிஆர் குறித்து தரம் தாழ்ந்த பேச்சு.. ஆ.ராசா ஒரு சுயநலவாதி.. கருணாநிதியால் கூட நெருங்க முடியல : கொந்தளித்த இபிஎஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2024, 11:46 am

எம்ஜிஆர் குறித்து தரம் தாழ்ந்த பேச்சு.. ஆ.ராசா ஒரு சுயநலவாதி.. கருணாநிதி கிட்ட நெருங்க முடியாது : கொந்தளித்த இபிஎஸ்!

திமுக எம்பியும் மூத்த தலைவருமான ஆ.ராசா தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை “லூசு” என்று விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இது அதிமுகவினரையும், எம்ஜிஆர் ரசிகர்களையும் கொந்தளிப்படைய வைத்து இருக்கிறது. இந்த நிலையில் ஆ.ராசா பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “இருந்தாலும் மறைந்தாலும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும், என்றும் இன்றும் மக்கள் மனங்களில் இதய தெய்வமாக வாழ்ந்துக் கொண்டு இருக்கின்ற மாண்புமிகு பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் குறித்து திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆண்டிமுத்து ராசாவின் தரம் தாழ்ந்த பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது. மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆண்டிமுத்து ராசாவின் வாடிக்கை.

அவர் பேசிய பாணியில், அவரைப் போல் அல்லாமல் , பல வரலாற்று உண்மைகளைப் பேச எங்களுக்கும் தெரியும் என்றாலும், தரம் தாழ்ந்த திமுக அளவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் தரம் தாழாது. இந்த விடியா திமுக ஆட்சியில், எனது தலைமையிலான கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி அவர்களின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும், கழகத்தின் இதய தெய்வங்களான புரட்சித் தலைவர் – புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் புகழுக்கு இணையாக கருணாநிதியின் பெயரை என்ன முயற்சித்தும் உயர்த்த முடியவில்லை என்ற ஆற்றாமையில் தான் ஆண்டிமுத்து ராசா போன்றோர் இது போன்ற அவதூறு கருத்துகளைப் பேசுவதாக நான் கருதுகிறேன்.

வரலாறு நெடுக எங்கள் இதய தெய்வங்களை பிம்பச் சிறையிட திமுகவினர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் மக்கள் மன்றத்தில் படுதோல்வியையே சந்தித்து உள்ளன. அதே போல, இனி வரும் காலங்களிலும் திமுகவினர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மக்கள் மனங்களில் வாழும் இதய தெய்வங்களின் புகழை எள்ளளவும் குறைக்க முடியாது.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆண்டிமுத்து ராசாவிற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். “கல்லை வடித்தால் அது வெறும் சிலை – அதை மக்கள் தொழுதால் மட்டுமே தெய்வம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…