மார்க்சிஸ்ட் எம்பிக்கு பயந்து மும்பை ஓடினாரா நடிகர் சூர்யா? திடீர் சலசலப்பு!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2023, 8:05 pm
மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த நடிகர் சூர்யா கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது மும்பை புறநகர் பகுதியில் 70 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா ஒன்றை வாங்கியதாக பரவலாக பேச்சு எழுந்தது.
மும்பையில் வீடு வாங்கிய சூர்யா
எனினும் அப்போது அது உறுதி செய்யப்படாத ஒரு தகவலாகவே இருந்தது. ஆனால் மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு இது ஊர்ஜிதம் செய்யப்பட்டு, சூர்யா மும்பையில் வீடு வாங்கியது உண்மைதான் என்ற தகவல் அத்தனை ஊடகங்களிலும் பரபரப்பு செய்தியாக வெளியானது. மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் 9,000 சதுர அடியில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த பங்களாவை அவர் வாங்கி இருக்கிறார், என்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து சூர்யா நிரந்தர மும்பைவாசி ஆகிவிட்டார், இனிமேல் அங்கேயே தங்கி இருந்து இந்தி படங்களில் நடிக்கப் போகிறார், மாமனார் சிவகுமாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கணவரை ஜோதிகா மும்பைக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார், மகள் தியா, மகன் தேவ் இருவரின் எதிர்கால கல்விக்காக சூர்யாவும்,ஜோதிகாவும் சென்னையில் இருந்து வெளியேறி விட்டனர் என்று டிசைன் டிசைனாக யூகங்கள் ரெக்கை கட்டி பறக்கத் தொடங்கின.
சமூக அநீதிக்காக குரல்
இன்னொரு பக்கம் தமிழகத்தில் ஏதாவது ஒரு சமூக அநீதி என்றால் சூர்யாவும், ஜோதிகாவும் பொங்கி எழுவார்களே, இனி நாம் என்ன செய்வது? என்று அவர்களைச் சுற்றி இருந்த திரையுலக போராட்டவாதிகள் கவலையில் மூழ்கி இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதில், பிரபல நட்சத்திர தம்பதியின் குடும்ப விவகாரங்களுக்குள் யாரும் மூக்கை நுழைப்பது சரியல்ல என்று கூறுவது ஏற்புடையதுதான்.
என்றபோதிலும் அவர்கள் இருவரும் 2021மே மாதத்திற்கு முன்பாக நான்கு ஆண்டுகள் தொடர்ந்து தமிழக மக்களின் பொதுப் பிரச்சனைகளுக்காகவும், சமூக அவலங்களுக்காகவும் ஆவேசமாக குரல் கொடுத்தவர்கள் என்பதால் அது எப்போதுமே விவாதத்துக்குரிய ஒரு விஷயமே. அது குறித்து பேச அனைவருக்கும் உரிமை உண்டு.
நீட் தேர்வுக்கு எதிராக கொந்தளிப்பு
குறிப்பாக 2017ல் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா கொந்தளித்ததுபோல் யாரும் கொதித்திருக்க மாட்டார்கள். 2018ல் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான துயர சம்பவம், 2020ம் ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் லாக்கப்பில் அடித்து படுகொலை செய்யப்பட்டது, இந்தி எதிர்ப்பு போன்றவற்றில் அப்போதைய எதிர்க்கட்சியான திமுக காட்டியதை விட நடிகர் சூர்யா பல மடங்கு கண்டன அறிக்கைகள் வெளியிட்டு தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அதேபோல சூர்யாவின் மனைவி ஜோதிகா 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தஞ்சை பெரிய கோவிலுக்கு அதிக நன்கொடை கிடைப்பது பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார்.
இப்போது மும்பையில் குடியேறுவதால் சூர்யாவும், ஜோதிகாவும் இனி தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்காக ஒருபோதும் குரல் எழுப்ப மாட்டார்கள் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.
இயக்கும் எம்பி
அதேநேரம் சமூகப் பிரச்சினைகளில் சூர்யாவை இன்றுவரை பின்னால் இருந்து இயக்கி வரும் ஆத்ம நண்பரான மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசனால்தான் அவர் மும்பையில் நிரந்தரமாக குடியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்ற பேச்சும் தமிழ் திரையுலகில் கடந்த சில நாட்களாகவே அடிபடுகிறது.
நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா பொங்கி எழுந்தபோதெல்லாம் அவர் வெளியிட்ட காட்டமான அறிக்கைகள் முழுக்க முழுக்க வெங்கடேசன் எம்பியின் கைவண்ணத்தில் உருவானதுதான் என்பது திரையுலக பிரமுகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
அகரம் கல்வி அறக்கட்டளையை நடத்தி வரும் சூர்யாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசனுடன் ஏற்பட்ட நட்புதான் இதுபோன்ற சமூக கொந்தளிப்புகளில் உதவிகரமாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
அதேநேரம் 2021 மே மாதத்திற்கு பின்பு, சமூக நலனில் சூர்யாவும் ஜோதிகாவும் காட்டி வந்த வேகம் அப்படியே அமுங்கிப் போய்விட்டது.
திமுக ஆட்சி குறித்து வாய் திறக்காத சூர்யா
“தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றி விட்டது, ஸ்டாலின் முதலமைச்சராகிவிட்டார், இனி நமக்கு எந்த வேலையும் இல்லை. அதனால் இதுவரை நாம் போராடியது போதும்” என்று சூர்யா ஒதுங்கிக் கொண்டாரோ, என்னவோ தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் சமூக நீதிக்கு ஏதாவது பங்கம் என்றால் அதுபற்றி அவர் மூச்சு விடுவதே கிடையாது.
குறிப்பாக உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் கூட சூர்யாவின் மனதை எந்த விதத்திலும் உறுத்தியதாக தெரியவில்லை. அல்லது இதெல்லாம் ஒரு சமூக அநீதியா? என்று அவர் கண்டு கொள்ளாமல் விட்டாரா? என்பதும் புரியவில்லை.
இதனால் போலி சமூக போராளி என்று தமிழக மக்கள் கிண்டலடிக்கும் அளவிற்கு சூர்யாவின் நிலைமை மோசம் ஆகிப்போனதுதான் மிச்சம்.
கீழடியில் எழுந்த சர்ச்சை
இந்த நிலையில்தான் சூர்யா- ஜோதிகாவின் இமேஜை டோட்டலாக காலி செய்யும் ஒரு நிகழ்வு கடந்த மாதம் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடந்தது. அன்று தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அவர் ஒரு சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டார்.
அவரை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்ற வெங்கடேசன் எம்பி, தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி அருங்காட்சியகம் திறக்கப்படும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே உள்ளே நுழைந்ததாகவும் எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பித்து விட்டு வெகுநேரம் கழித்தே வெளியே சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சூர்யா குடும்பத்துடன் கைக்கோர்த்த எம்பி
இந்த இடைப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் கொளுத்தும் கொடை வெயிலில் கால் கடுக்க காத்து நின்றும் உள்ளனர்.
காலை10 மணி ஆகியும் ஏன் அருங்காட்சியக நுழைவு கேட்டை திறக்கவில்லை என்று கேட்டு அவர்கள் அங்கு காவலுக்கு நின்ற போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அதன் பிறகுதான் நடிகர் சூர்யா குடும்பத்தினரை வெங்கடேசன் எம்பி அருங்காட்சியகத்திற்குள் அழைத்துச் சென்ற விஷயமே அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் அப்போது வேகமாக பரவியது.
ஆனால் வெங்கடேசனோ இந்த விவகாரத்தை டிவி செய்தி சேனல்களிலும், நாளிதழ்களிலும் வெளி வராமல் பார்த்துக் கொண்டார் என்று கூறப்பட்டது.
அகரம் வெறும் விளம்பரத்துக்காகவா?
அதே நேரம் பாதிக்கப்பட்ட மாணவர்கள், முதியோர்கள் மாற்றுத் திறனாளிகள் பிரச்சனையை அப்படியே விட்டுவிடவில்லை. சூர்யா நடத்தி வரும் அகரம் அறக்கட்டளைக்கு இ-மெயில் மூலமும், தபால்களை அனுப்பியும் வறுத்து எடுத்து விட்டனர்.
“எங்களைப் போன்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நீங்கள் மாணவர்களின் கல்விக்காக அறக்கட்டளை நடத்துகிறேன் என்று கூறுவதெல்லாம் விளம்பரத்துக்காகத் தானா? சமூக நீதிக்காக நீங்கள் இதுவரை குரல் கொடுத்ததெல்லாம் வெளி வேஷம் தானா?…”என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதுபோன்ற கண்டனக் கணைகள் இன்று வரை அகரம் அறக்கட்டளைக்கு சென்று கொண்டிருப்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம்.
பயந்து மும்பை பறந்தாரா?
“இந்த கடிதங்கள்தான் நடிகர் சூர்யா மும்பையில் நிரந்தரமாக குடியேறுவதற்கு வழி வகுத்து விட்டது. அதற்கு முன்பு வரை மும்பையில் வீடு வாங்கி இருந்தாலும் கூட அவ்வப்போது சென்னைக்கு வந்து போகும் எண்ணம்தான் அவருக்கு இருந்தது. ஆனால் மதுரை எம்பி வெங்கடேசனால் உருவான இடியாப்ப சிக்கல் சூர்யாவை பல்வேறு குழப்ப நிலைக்கும் உள்ளாக்கிவிட்டது” என்று கோலிவுட் திரைப்பட பிரமுகர்கள் கூறுகின்றனர்.
“நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் இயல்பிலேயே திமுக அனுதாபிகள். ஆனால் தனது சுயநலத்துக்காக அதை பயன்படுத்திக் கொண்டு வெங்கடேசன் எம்பி சமூக நீதி போராட்ட களத்தில் சூர்யாவை இறக்கி அவமானப்படுத்தி விட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிகர் சூர்யா சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். அடுத்த மூன்றாண்டுகளுக்கும் அவர் கொடுக்க மாட்டார் என்பது திரையுலகில் உள்ள அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
அதேநேரம் சூர்யாவுக்கு இன்னொரு பெரிய குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அடுத்து தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்து விட்டால் மீண்டும் சமூகப் போராளி அவதாரத்தை எடுப்பது கடினமான காரியம் ஆகிவிடும். இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள், ஏன் கோபம் கொப்பளிக்க தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்ற கிடுக்குப்பிடி கேள்விகளும் எழும்.
சமூக போராளி வேடமா?
வெங்கடேசன் எம்பி, தான் எழுதிய காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதினத்துக்காக 2011ல் சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அதனால் சினிமாவுக்குள் நுழையவேண்டும் என்கிற ஆர்வத்தில் நடிகர் சூர்யாவுடன் கை கோர்த்தார். சமூக நீதிக்காக போராட வேண்டும் என்று அவரை உசுப்பேற்றியும் விட்டார். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதற்கு சூர்யா ஒப்புக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால் அவர் மரணம் அடைந்த பின்பு சூர்யாவுக்கு வீரம் தானாகவே வந்து விட்டது. 2017ல் தொடங்கிய நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுத்து சமூகப் போராளி ஆகிவிட்டார். இனியும் அந்த வேடத்தை போடுவது பொருத்தமாக இருக்காது என்பதை அவர் தற்போது உணர்ந்து கொண்டும் இருக்கிறார்.
இதற்கிடையேதான் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட விவகாரத்தில் சிக்கி கடும் விமர்சனத்துக்கு உள்ளானதால் சூர்யா தனது குடும்பத்தினருடன் நிரந்தரமாக மும்பைக்கு பறந்து விட்டார். இத்தகைய அவலமான நிலையை அவருக்கு ஏற்படுத்தித் தந்தவரே மதுரை எம்பி வெங்கடேசன்தான். ஆனால் இதற்கு நான் காரணம் இல்லை என்று எம்பி மறுக்கக் கூடும். என்றபோதிலும் சூர்யாவை போலி சமூகப் போராளியாக மாற்றியதில் பெரும் பங்கு இந்த எம்பிக்கு உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்று அந்த கோலிவுட் திரைப்பட பிரமுகர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.