இந்தி பற்றி கேள்வி எழுப்பியவரை நான் மிரட்டுனேனா? உங்களுக்கு இதுதான் வேலையா? பிடிஆர் ரிப்ளை.. மீண்டும் சீண்டிய அண்ணாமலை!
சென்னையில் சமீபத்தில் அயலக தமிழர்கள் விழா நடந்தது. இதில் நடந்த அமர்வு ஒன்றில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் பார்வையாளர்கள் கேள்விக்கும் பதிலளித்தார்.
அப்போது அங்க இந்தி மொழி தொடர்பாக ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், அதில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்து, பிடிஆர் செயலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
விவாதம்: அந்த வீடியோவில் அங்கிருந்த நபர் ஒருவர் எழுந்து, “எட்டுத்திக்கும் தமிழர்கள் செல்ல வேண்டும் என்றால் நாம் அனைத்து மொழிகளையும் படிக்க வேண்டும். இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கிறார்கள் என்று சொல்வதை விட்டுவிட்டு அனைத்து மொழிகளையும் கற்பிக்க வேண்டும். ஜெர்மனி, ஸ்பானிஷ் எனப் பல மொழிகளையும் பயிற்றுவிக்க வேண்டும்.
பல மொழிகளைச் சொல்லித் தரும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் தடுக்கிறது. மாணவர்கள் பல்வேறு மொழிகளை கற்பதை ஏன் தடுக்க வேண்டும்” என்று கேட்டார்.
அப்போது அமைச்சர் பிடிஆர் குறுக்கிட்டு, “யார் தடுக்கிறார்கள்” எனக் கேட்டார். அதற்கு அந்த நபர், “நமது அரசு” எனப் பதிலளித்தார். அப்போது அமைச்சர் பிடிஆர், “எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்” எனக் கேட்கவே, அந்த நபர் “இது ஜனநாயகமற்றது.. நான் குளோபல் சிட்டிசன். நானும் திராவிடன் தான். எனது பெயரும் கருணாநிதி தான்” எனக் கூறுகிறார். அப்போது தான் கேள்வி கேட்ட அந்த நபரைச் சிலர் வெளியேற்றியதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் பிடிஆர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அங்கே என்ன நடந்தது என்று முழுமையாகத் தெரியாதவர்களுக்காக இந்த இரண்டாம் பாதி. நமது வளர்ந்த மாநிலத்தில் தொடர்ந்து பாதி உண்மைகள், திரிக்கப்பட்ட பேச்சுகள் மற்றும் முழுப் பொய்களைச் சொல்லி பிரச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்ட அண்ணாமலை, அந்த வீடியோவில் நமது மொழிக் கொள்கைக்கான அரசியல் காரணங்களைக் கவனமாக விட்டுவிட்டார். அங்கே என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரத்தை ஏற்கனவே பல ஊடகங்கள் வெளியிட்டுவிட்டன. அப்படியிருக்கும் போது அவரது ஆதரவாளர்கள் மட்டுமே அவர் சொல்வதை உண்மை என நம்புவார்கள். ஒன்று அங்கே என்ன நடந்தது என்பதைச் சரியாக அறிந்து கொள்ள அவர் அக்கறை காட்டாமல் இருந்திருப்பார் அல்லது வேண்டுமென்றே அவர் பொய்யான கருத்துகளைப் பரப்பி இருக்கிறார் என்றே அர்த்தம். மேலும், அந்த நிகழ்வில் இருந்து யாரும் வெளியேற்றப்படவில்லை. ஒவ்வொரு முறையும் நான் வெயிட் எனச் சொல்வது, கேள்வி கேட்ட நபர் என்னைப் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.. அந்த நபர் தனது இருக்கையில் அமர்ந்து எனது அமர்வு முடியும் வரை அங்கேயே இருந்தார். அது மட்டுமின்றி அடுத்தடுத்த அமர்வுகளிலும் அவர் கலந்து கொண்டார்.
இதற்குப் பிறகு இன்னும் பல தமிழக பாஜக தலைவர்கள் வரலாம், போகலாம், ஆனால் தமிழகம் தனது இருமொழிக் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது, கட்டாய மும்மொழிக் கொள்கையை ஏற்காது, இது தான் இந்தியைத் திணித்து, நமது தாய் தமிழ் மொழியைக் குலைக்கும் முயற்சியாகும். இந்தி-பெல்ட் மாநிலங்களின் தாய்மொழிகளுக்கு இதுவே நடந்துள்ளது” என்று விளக்கமளித்துள்ளார். மேலும், அங்கே நடந்தது என்பதை விளக்கும் வகையில் ஆதாரமாக வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் அமைச்சர் பிடிஆர் கேள்வி கேட்ட அந்த நபரிடம், “நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் ” எனக் கேட்கிறார். அதற்கு அந்த நபர் நான் ஒரு குளோபல் சிட்டிசன் எனப் பதில் அளிக்கிறார். நேரடியாக அமைச்சர் பிடிஆர் கேள்விக்கு அந்த நபர் பதிலளிக்கவில்லை.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் பிடிஆர், “அந்த கேள்விக்கு நானே பதில் சொல்கிறேன். இதற்குப் பதில் சொல்வதை அவர் அவமானமாகக் கருதுகிறார். அவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிக்காகோ நகரில் வசித்து வருகிறார். சிக்காகோ நகரில் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை சிக்காகோ சிட்டி கவுன்சில் தான் செட் செய்கிறது. மாணவர்களுக்கான பாடத்திட்டத்தைச் சிட்டி கவுன்சில் உருவாக்கும் நகரில் அவர் ஏன் வாழ வேண்டும் என யாராவது கேளுங்கள்.. அப்படியிருக்கும் போது இங்கே வந்து அவர் நாம் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்கிறார். சிட்டி கவுன்சில் பாடத்திட்டத்தை நிர்ணயம் செய்யும் நகரில் நீங்கள் ஏன் இருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பிய மொழியை கற்கலாம். இங்கே யாரும் எந்த மொழியையும் கற்க வேண்டாம் எனச் சொல்லவில்லை. நான் தமிழ்நாட்டில் படித்தேன்.. நான் தமிழ் மொழியுடன் பிரஞ்சு மொழி கற்றேன். எனது பிள்ளைகள் சென்னையில் படிக்கிறார்கள்.
அவர்கள் ஸ்பேனிஷ், பிரஞ்சு மொழி கற்கிறார்கள். இவர் சொல்வது போல இங்கே மொழியை கற்பதையும் யாரும் தடுக்கவில்லை. நமது கிராமத்தில் உள்ள பிள்ளைகள் பள்ளிகளில் என்ன படிக்க வேண்டும் என்பதை டெல்லியில் இருந்து கொண்டு யாரோ நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார் என்றால் அவர் தவறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என அர்த்தம். அவர் மற்ற நாடுகளுக்குப் போய் இதைச் செய்யட்டும். இந்த நாட்டில் அதற்கு இடமில்லை. இந்த நாட்டில் ஜனநாயகம், சுயாட்சி இருக்கும் போது அதற்கு இடமில்லை. அதுதான் நமது அடையாளம்” என்கிறார்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.