மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தைக் கேட்டு திமுக அரசு மிரட்டியதா?…அமைச்சரால் விவகாரம் விஸ்வரூபம்!…

Author: Udayachandran RadhaKrishnan
16 டிசம்பர் 2023, 9:18 மணி
Modern
Quick Share

சென்னை நகரில் கடந்த வாரம் பெருவெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது, இனி 20 சென்டி மீட்டருக்கு மேல் ஒரு சொட்டு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்காதபடி திட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார்.

அதையே முதலமைச்சர் ஸ்டாலினும் திமுக அரசின் மிகப் பெரிய சாதனையாக மேடைகள் தோறும் குறிப்பிட்டு பேசியும் வந்தார். ஆனால் டிசம்பர் 4ம் தேதி சென்னை நகரிலும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களிலும் பெய்த கன மழையால் சென்னை நகருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு மாநிலத்தின் தலைநகரில் 51 சதவீத அளவிற்கே மழை நீர் வடிகால் திட்டப் பணிகள் இதுவரை நடந்து முடிந்துள்ளது என்று வெளிப்படையாக கூறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இதனால் யார் சொல்வது உண்மை? என்ற சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் வெடித்தது.

இந்த விவாதமே இன்னும் ஓயாத நிலையில், திமுக அரசுக்கு இன்னொரு பெரிய தலைவலியும் தற்போது உருவாகிவிட்டது. முதலமைச்சர் ஸ்டாலின், தானாக வரவழைத்துக் கொண்டதாக கூறப்படும் இந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் சேலம் நகருக்கு சென்றபோது, தமிழகத்தின் பிரபல முதல் சினிமா ஸ்டுடியோவான மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் முன்பாக நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார். அதை அப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு அவருடைய தந்தையும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கும், மாடர்ன் தியேட்டர்ஸுக்கும் இடையே இருந்த மிக நெருங்கிய தொடர்பையும் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.

ஏனென்றால் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1950ம் ஆண்டு வெளியான மந்திரிகுமாரி படத்திற்கு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி இருந்தார். அது அவருக்கு திரைத் துறையில் பெரும் பெயரையும், புகழையும் பெற்று தந்தது. அதனால் முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் முன்பாக எடுத்துக்கொண்ட செல்ஃபியை சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொண்டதற்கு
பாராட்டுகள் குவிந்தது.

ஆனால் அதன் பின்பு திரை மறைவில் நடந்ததாக கூறப்படும் பல விஷயங்கள், சினிமா பட கிளைமாக்ஸ் காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியும் விட்டது. அது திமுக அரசு மீது பல்வேறு சந்தேகங்களையும், கேள்விக் கணைகளையும் எழுப்பி விட்டும் இருக்கிறது.

அதாவது கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தையொட்டி
மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் முன்பாக அவருடைய சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் வைக்க விரும்பியதாகவும், ஆனால் அதை இந்த இடத்தின் உரிமையாளர் விஜயவர்மன் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அந்த இடத்தை வாங்கி, வீடுகளைக் கட்டி விற்பனை செய்து வரும் வர்மா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரான அவர் இது தொடர்பாக திமுக அரசு மீது சில குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார்.

சேலத்தில் விஜயவர்மன் செய்தியாளர்களிடம் பேசும்போது “முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரியில் சேலம் வந்தபோது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் நினைவு வளைவு அருகே நின்று, செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது அவர் என்னை சந்திக்க விரும்புவதாக, எனக்கு தகவல் வந்தது. நான், எனது மனைவியுடன் சென்று அவரை சந்தித்தேன்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலை பராமரித்து வருவதற்காக மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் விருப்பமிருந்தால், அந்த இடத்தை தர முடியுமா? என்று கேட்டார். மேலும், கட்டாயம் எதுவுமில்லை என்று கண்ணியத்துடன் கூறிவிட்டார். குடும்பத்தினரை ஆலோசித்துவிட்டு தகவல் தெரிவிப்பதாக அவரிடம் கூறினேன்.

அதன் பின்னர், மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் அருகே, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை வைப்பதற்கு இடம் தேவைப்படுகிறது என்று கேட்டு, மாவட்ட அதிகாரிகள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதற்கிடையே நெடுஞ்சாலைத் துறையினர், ஏற்காடு சாலையின் எல்லையை அளவீடு செய்வதாகக் கூறி, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் இருக்கும் இடத்துக்குள் கடந்த 1-ம் தேதி முட்டுக்கல் நட்டுவைத்து, நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்று எச்சரிக்கை பேனரும் வைத்துவிட்டனர். அந்த நிலம் எனக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன. நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறேன்” என்று மனம் குமுறி இருந்தார்.

விஜயவர்மன் இப்படி மறைமுகமாக திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த நிலையில் அவர் முதலமைச்சர் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டுகிறார் என்று நினைத்தோ அல்லது இது ஸ்டாலின் மீதான இமேஜை தமிழக மக்களிடம் முழுமையாக காலி செய்துவிடும் என்று பயந்தோ தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவசர அவசரமாக ஒரு விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

அதில் “சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது, தற்போது மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தப் பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம் – ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8-ல் உள்ளது.

இந்தச் சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத் துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களால், டிசம்பர் 2-ம் தேதி அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின்போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத் துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத் துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவு வாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக் கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெளிவுபடுத்தப்படுகிறது” என்று மறுத்து இருக்கிறார்.

“அமைச்சர் எ வ வேலு, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வாயில் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை இந்த விவகாரத்தை இன்னும் விஸ்வரூபம் எடுக்க வைத்துவிட்டது என்றே கருதத் தோன்றுகிறது.

ஏனென்றால் அமைச்சரின் விளக்கம் பொதுவெளியில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி விட்டிருக்கிறது. அது மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பாக கருணாநிதி சிலையை வைப்பதற்கு திமுக அரசு மறைமுகமாக தொடர்ந்து ஈடுபட்டதை உறுதி செய்வது போலவும் அமைந்து இருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்வது இதுதான்: “சேலம்-ஏற்காடு சாலையை விரிவாக்கம் செய்வதற்காக மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் முன்பாக உள்ள இடம் தற்போது சர்வே செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் எ வ வேலு கூறுகிறார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அப்போதெல்லாம் சேலம்- ஏற்காடு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் திமுக அரசுக்கு வராத நிலையில் இப்போது மட்டும் திடீரென்று தோன்றியது ஏன்?…

அதேநேரம் மாடர்ன் தியேட்டர்சின் பக்க வாட்டில் முன்பும், பின்புமாக இருக்கும் இடத்தை விரிவாக்கத்திற்காக இதுவரை அளவீடு செய்யாதது ஏன் என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. அது பற்றிய எந்த தகவலையும் அமைச்சர் வெளியிடவில்லை என்கிறபோதே மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் மட்டுமே குறிவைக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத் துறையின் நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது என்று அமைச்சர் கூறுகிறார்!… அப்படியென்றால் அரசின் நோக்கமே அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகத்தான் திடீர் அளவீடு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொள்வதுபோல் தெரிகிறதே?…

மேலும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசிய நிலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தின் உரிமையாளர் விஜய வர்மன் முதலமைச்சருக்கு சாதகமாக எந்த முடிவையும் தெரிவிக்காத நிலையில்தான் தற்போது நுழைவாயில் முன்பாக உள்ள இடம் நெடுஞ்சாலைத் துறையால் அளவீடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறப்படும் செய்திகளுக்கும் இடையே ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருப்பதைத்தானே காட்டுகிறது?…

உண்மையைச் சொல்லப்போனால் பொதுவாக திமுகவினர் என்றாலே நில அபகரிப்பு செய்வதில் பலே கில்லாடிகள் என்று கூறுவது உண்டு. ஆனால் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரத்திலோ முதலமைச்சர் ஸ்டாலினின் விருப்பம் நிறைவேறாமல் போய்விட்டது வெளிப்படையாகவே தெரிகிறது.

அதுவும் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுத்தும் கூட காரியம் கைகூடாதது திமுக அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கலாம். அதனால்தான் மாநிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலையில் உள்ள தமிழக அரசு சேலம் -ஏற்காடு சாலையை மட்டும் விரிவுபடுத்த மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவது ஏன்? இன்னும் எவ்வளவு காலத்திற்குள் இந்த சாலையை விரிவுபடுத்தி முடிப்பார்கள்?…அல்லது ஆண்டு கணக்கில் கிடப்பில் போடுவார்களா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

நிலைமை இப்படியே போனால், நூற்றாண்டு விழாவுக்காக கருணாநிதி மிகவும் நெருங்கி பழைய நண்பர்களின் வீடுகள், அவர் பேசிய 50க்கும் மேற்பட்ட ஊர்களின் பிரபல மேடைகள் அருகில் அமைந்த இடங்களில் கூட அவருடைய சிலையை வைப்பதற்கு இடத்தை கேட்பார்களோ என்ற பீதியும் பலருக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது.

இது, இனி இங்கே யாரும் செல்ஃபி எடுக்கக் கூடாது என்று விளம்பர பதாகைகள் வைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டதாக சமூக ஊடகங்களில் கேலியாகவும் விமர்சிக்கப்படுகிறது.

அதேநேரம் கருணாநிதியின் சிலையை வைப்பதற்கு இடம் கொடுக்காததால்தான் தமிழக நெடுஞ்சாலை துறை திடீரென விழித்துக் கொண்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

அமைச்சரின் திடீர் மறுப்பு விளக்கமோ எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வதைப் போல அமைந்திருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ,தேவையின்றி ஒரு புதிய சர்ச்சையில் திமுக அரசு சிக்கிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது!

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 499

    0

    0