பழி வாங்குவதற்காக ED அதிகாரியை கைது செய்யவில்லை… அண்ணாமலைக்கு சூசகமாக திமுக எம்பி கனிமொழி பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2023, 6:01 pm

பழி வாங்குவதற்காக ED அதிகாரியை கைது செய்யவில்லை… அண்ணாமலைக்கு சூசகமாக திமுக எம்பி கனிமொழி பதில்!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிர் அணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி பங்கேற்றார். இந்த நிகழ்வில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்றார்.

பின்னர் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கனிமொழி, “அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதைத் தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசு போல, பாஜக போல திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதி, நியாயத்தை நிலை நாட்டுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் யாரையும் மிரட்டுவதற்காக செய்துவிட்டு பாதியில் நிறுத்தப் போவதில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கியதை வைத்து அமலாக்கத்துறையையே குற்றம் சொல்லக்கூடாது என பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, பாஜக மீதும் பாஜக நிர்வாகிகள் மீதும் சிஏஜி அறிக்கையில் முன்வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை, அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்” எனக் கூறினார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத் துறை அவர் மீது 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், வழக்கில் இருந்து விடுதலை செய்வதாகக் கூறி ரூ.3 கோடி லஞ்சம் தருமாறு மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார்.

முதலில் ரூ. 20 லட்சம் பெற்ற நிலையில், அடுத்த தவணை பணத்தை பெறும்போது, அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து, அங்கித் திவாரி வீட்டிலும் அமலாக்கத்துறையின் மதுரை அலுவலகத்திலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

அங்கித் திவாரி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்று கையும் கையூட்டுமாகச் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி வந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரியை மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்திருப்பது விவாதப்பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, யார் தவறு செய்தாலும் தண்டனை உறுதி எனக் கூறியுள்ளார் கனிமொழி.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 278

    0

    0