மணிப்பூர் சம்பவங்களை EPS கண்டிக்கவில்லையா?…திமுக அமைச்சரால் வெடித்த சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 8:01 pm

தமிழக அமைச்சர்களில் செந்தில் பாலாஜி, பொன்முடியால் திமுகவுக்கு ஏற்பட்ட தலைவலியே இன்னும் நீங்காத நிலையில் தற்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசால் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

அமைச்சர் மீது கடும் விமர்சனம்

அதிகமாக அதிர்ந்து பேசத்தெரியாத தங்கம் தென்னரசு, அரசியல் தொடர்பான நிகழ்வுகளை எப்போதும் தனது விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர் என்பார்கள். அப்டேட் அரசியல் அவருக்கு அத்துபடி, அதில் அவரை மிஞ்ச யாருமே கிடையாது என்று திமுகவினர் அவரை புகழ்வதும் உண்டு. அப்படிப்பட்டவரா, இப்படி பேசினார் என்று சமூக வலைத்தளங்களில் தங்கம் தென்னரசு மீது பலரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 22-ம் தேதி காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

அப்போது மணிப்பூர் வன்முறைகள், அந்த மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் அவர் விரிவாக குறிப்பிட்டார்.

அதிமுக இரட்டை வேடம்

“மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளன. திமுக சார்பில் அந்த சம்பவங்களை கடுமையாக கண்டித்து கருத்துக்களை முதலமைச்சர் பதிவு செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தலையிட்டு கண்டிக்கும் அளவுக்கு மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் அதை கண்டித்துள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வாயை திறக்காமல் மௌனியாக இருப்பது ஏன்?…

யாருக்கும் அடிமை இல்லை என்று கூறும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமுதாயத்தின் தலை குனிவாக இருக்கும் மணிப்பூர் விவகாரத்தில் இதுவரை அவரிடம் இருந்து ஒரு வார்த்தை வராத நிலையில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

பெண்களுக்கு எதிராக நடந்துள்ள வன்முறையை கண்டிக்க எதிர் வராத சக்திகளும் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வெட்கக்கேடு” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக சாடி கேள்வியும் எழுப்பி இருந்தார்.

புயலை கிளப்பிய மணிப்பூர் வீடியோ

மணிப்பூர் வன்முறை தொடர்பான நிகழ்வுகள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வேதனை மிகுந்த ஒன்றுதான். இது மிகவும் கண்டனத்துக்கும் உரியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கவும் முடியாது.

இந்த சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்ததுமே பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், மம்தா, கெஜ்ரிவால், நிதிஷ்குமார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் அனைவருமே இந்தக் கொடூர நிகழ்வுகள் வலி மிகுந்தவை என்றும் மனம் குமுறினர்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புதிய தலைவலி

அதுபோலவே தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் வன்மையாக கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். இதைக் குறிப்பிடும்போதுதான், அமைச்சர் தங்கம் தென்னரசு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தாக்குவதாக நினைத்து திமுக தலைமைக்கு புதிய தலைவலியை உருவாக்கி விட்டிருக்கிறார்.

ஏனென்றால் அவர் செய்தியாளர்களிடம் இதுபற்றி ஜூலை 22ம் தேதி பகல் 12 மணி அளவில் பேட்டி அளித்தபோது அதிமுக மீது குற்றம்சாட்டினார்.

ஆனால் அதிமுகவை கேள்வி கேட்ட விஷயத்தில்தான் அமைச்சர் தங்கம் தென்னரசு அப்டேட் விஷயத்தில் கோட்டை விட்டு இருக்கிறார், அதில் மிகவும் பின்தங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரிகிறது.

ஏனென்றால் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறிது நேரத்திலேயே அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் பதிவிடப்பட்டது.

அதில் ஜூலை 21-ம் தேதி இரவு 10.12 மணி அளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மணிப்பூர் வன்முறை சம்பவங்களை கண்டித்து வெளியிட்ட ட்விட் சுட்டிக் காட்டப்பட்டும் இருந்தது.

அந்த பதிவில், “மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற இழிசெயலை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் முதலமைச்சர் பைரன் சிங் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் 14 மணி நேரத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு இது தெரியாமல் போனது ஆச்சரியமான விஷயம்தான். இதனால் அதிமுகவிடம் அவர் வாங்கிக் கட்டிக் கொண்டதுதான் மிச்சம்.

வாங்கிக் கட்டிக் கொண்ட தங்கம் தென்னரசு!

இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ‘இந்த விடியா முதல்வரின்’ ஆட்சியில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் பொய் பிரச்சாரம் செய்ய தயங்குவதில்லை, மணிப்பூர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நேற்றே தனது கடும் கண்டனங்களை தெரிவித்துவிட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மணிப்பூர் குறித்து பேசவே இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருப்பது மிக மோசமான ஏமாற்று வேலை! இந்த சமுகவலைதள யுகத்தில் கோமாளித்தனமானதும் கூட…!

நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசுதான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி!

அது சரி…, மணிப்பூர் குறித்து கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினாரா என கேள்வி கேட்பவர்கள், மேகதாது அணை கட்ட ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையோ , தன் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ்ந்து குலாவிய கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே.சிவகுமாருக்கு எதிராகவோ தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை வாய்திறக்காதது ஏன் என்று கேள்வி கேட்பார்களா??” என்று காட்டமாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அதிமுக எழுப்பிய இந்த கிடுக்குப் பிடி கேள்வி ஸ்டாலினுக்கு நிச்சயம் கடும் எரிச்சலை ஏற்படுத்தி விட்டிருக்கும் வாய்ப்புகள் உண்டு.

தர்ம சங்கடத்தில் திமுக

ஏற்கனவே அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி படாத பாடுபட்டு வரும் நிலையில் தங்கம் தென்னரசு வம்பில் மாட்டிக் கொண்டு தேவையின்றி திமுக தலைமைக்கு தர்ம சங்கட நிலையை உருவாக்கி விட்டாரே என்ற கோபமும் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

ஏனென்றால் திமுக அமைச்சர்களில் பெரும்பாலானவர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் இன்றைய நவீன யுகத்தில் நடத்தப்படும் உடனுக்குடனான அடுத்தடுத்த
நிமிட அரசியல் தெரியவில்லையே? அதில் அவர்கள் ஆர்வமே கொண்டிருக்கவில்லையா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் எழுகின்றன.

அதுவும் அறிவார்ந்தவர் என்று திமுகவினரால் கொண்டாடப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு அன்றாட அரசியல் நிகழ்வுகளில் இவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறாரே?… என்று பலரும் கேலி பேசும் நிலையும் உருவாகிவிட்டது.

மேகதாது விவகாரத்தையும் இழுத்து விட்ட அமைச்சர்

“அமைச்சர் தங்கம் தென்னரசை சீண்டி இருப்பதுடன் மேகதாது அணை விவகாரத்தையும் இழுத்து காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சனையையும் அதிமுக சாதுர்யமாக எழுப்பிவிட்டது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“காவிரியில் நீர் திறந்த விடக்கோரி மத்திய பாஜக அரசை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தும் அதே நேரத்தில் திமுகவின் தோழமைக் கட்சியாக உள்ள காங்கிரஸின் மேலிட உதவியையும் நாடவேண்டும். ஏனென்றால் கர்நாடகத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது.

இன்னும் 20 நாள் மட்டுமே மேட்டூரில் இருந்து பயிர்களுக்கு தண்ணீர் வழங்கமுடியும் என்ற நிலையில் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரும் அளவில் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் யானை பசிக்கு சோளப்பொரி போடுவது போல கர்நாடக அரசு தற்போது வினாடிக்கு 9,500 கன அடி நீரை மட்டுமே திறந்து விட்டுள்ளது.

இதுவும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியாது. கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகம் இருக்கும். எனவே காவிரி நதிநீர் பங்கீட்டின்படி தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கவேண்டிய 192 டிஎம்சி நீர் பெறுவதை கர்நாடக அரசிடம் திமுக அரசு உறுதிசெய்யவேண்டும்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோதே முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக காங்கிரஸ் அரசிடம் இதை பேசியிருக்கலாம். ஆனால் தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணியை இதுபெரிதும் பாதிக்கும் என்பதால் காவிரி நதிநீர் பங்கீடு பற்றி பேச்சு நடத்தாமல் ஸ்டாலின் தவிர்த்து இருப்பதாகவே தோன்றுகிறது.

அதேநேரம் டெல்லியில் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பான அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தால்தான் பெங்களூரு எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என்று கெஜ்ரிவால் நிபந்தனை விதித்து காங்கிரசை பணிய வைத்தும் விட்டார். அது போன்றதொரு நெருக்கடியை காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் அளித்திருந்தால் காங்கிரஸ் மேலிடம் கர்நாடக அரசை சமாதானப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்திருக்கும்.

எனவே அடுத்த மாதம் மும்பையில் நடக்கவிருக்கும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க இந்த நிபந்தனையை டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி முதலமைச்சர் ஸ்டாலின் வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதுவும் நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது!

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 307

    0

    0