பிரதமர் மோடி, CM ஸ்டாலின் வருகைக்காக தயாராகும் காந்தி கிராமம் ; கொடிகளை அகற்றச் சொன்ன போலீஸ்… பாரபட்சம் காட்டுவதாக பாஜகவினர் வாக்குவாதம்…!!
Author: Babu Lakshmanan10 November 2022, 5:34 pm
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் பகுதியில் திமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கொடியை அகற்றச் சொன்னதால், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட சின்னாளபட்டி அருகே உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழா மற்றும் 75ஆவது துவக்க விழா நாளை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்என் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.
எனவே, திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் திண்டுக்கல்லில் இருந்து காந்திகிராமம் பகுதி வரையிலும், மதுரையிலிருந்து காந்திகிராமம் வரையிலும் இரு பகுதிகளிலும் கொடி கட்டி உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் எலிபேட் மூலம் காந்திகிராமம் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் இருந்து மேடைக்கு செல்கிறார் இப்பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக, பாரதிய ஜனதா கட்சி கொடி கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என காவல்துறையினர் இரு கட்சியினரை மறித்து கூறியுள்ளனர்.
இதில் யார் முதலில் கொடியை கழட்டுவது என்பதில் இருகட்சியினர் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது, காவல்துறையினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது சமூக வலைதளங்களில் காவல்துறை திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அனைவரும் காந்திகிராம பகுதி முன்பாக சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர், திண்டுக்கல், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தமிழக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதில் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தைக்கு பாரதிய ஜனதா கட்சியினர் உடன்படவில்லை.
இதன் காரணமாக சின்னாளபட்டி காந்திகிராம பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இப்பகுதியில் போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.
0
0