டாக்டர் குடும்பத்தை கட்டிப்போட்டு 275 சவரன் நகை திருட்டு… ரூ.25 லட்சமும் அபேஸ்… வடமாநில கொள்ளை கும்பல் கைவரிசையா..?
Author: Babu Lakshmanan15 February 2022, 8:52 am
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கட்டுப்போட்டு 275 சவரன் நகை மற்றும் ரூ.25 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் சாலையில் தனியார் மருத்துவமனை மருத்துவராக செயல்பட்டு வருபவர் சக்திவேல். இவர் தனது மனைவி ராணி மற்றும் குடும்பத்தினருடன் நேற்றிரவு தங்களின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், கும்பல் கத்தியை காட்டி மிரட்டி டாக்டர் சக்திவேல், மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் என 4 பேரை கட்டிப்போட்டனர்.
பின்னர், பீரோவில் இருந்த 275 சவரன் நகை மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்ததுடன், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மருத்துவரின் காரையும் அபேஸ் செய்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார், நேரில் சென்று விசாரணையை தொடங்கினர். கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளை கும்பலா? அல்லது உள்ளூர் நபர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.