வெள்ளத்தில் தத்தளிக்கும் சொந்த கிராமம்… பெற்றோரை நினைத்து வேதனை… மீட்பு பணிகளில் அமைச்சர் உதயநிதியுடன் கைகோர்த்த மாரி செல்வராஜ்..!!
Author: Babu Lakshmanan19 December 2023, 9:04 am
நெல்லையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன், இயக்குநர் மாரி செல்வராஜும் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்.
குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழந்து, தனித்தீவு போல காட்சியளிக்கின்றன. அதிலும், திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பதிவாகியுள்ளது.
இந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பொதுமக்கள் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளனர். போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அரசின் உதவியை எதிர்நோக்கி இருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், நெல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். அவருடன் இயக்குநர் மாரி செல்வராஜும் இணைந்துள்ளார்.
முன்னதாக அவர் விடுத்துள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது.
ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர், பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர், குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றுக்கும் குளத்துக்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன், என பதிவிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், “கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் .வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது… நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்… மீள்வோம்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் புளியங்குளம் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகவும், அந்த கிராமத்தில் தனது பெற்றோர் சிக்கியிருப்பதாகவும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார். தனது கிராமத்தில் இருப்பவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறிய அவர், அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளதாக தெரிவித்தார்.