நாளை முதல் ஸ்டிரைக்… ஏற்கனவே கொள்ளையடிக்கிறாங்க… இப்ப எப்படியெல்லாம் மக்களை வாட்டி வதைப்பார்களோ..? தங்கர் பச்சான் வேதனை..!!
Author: Babu Lakshmanan8 January 2024, 9:35 pm
அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் வேதனை தெரிவித்துள்ளார்.
அரசுடன் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. இதனால், பேருந்து சேவையில் பாதிப்பு ஏற்படுமோ என்ற கலக்கத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசுப் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- கரங்களுக்கும்,பெருநகரங்களுக்கும்,பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பொருளாதாரம் தேடி வாழ்வை தேடிக்கொண்ட என்னைப் போன்றவர்கள் ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் பிறந்த மண்ணில் உறவினர்களுடன் கொண்டாடுவதையே விரும்புகின்றனர்.
இவ்வாறான நாட்களில் பொதுப் பேருந்தில் இடம் பிடித்து நின்று கொண்டே பயணம் செய்து ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்பிய நாட்களை என்னால் மறக்க இயலாது! சொந்த ஊர்திகளில் குடும்பத்தினருடன் பிறந்த ஊர் சென்று திரும்பும் வசதி வாய்ப்புகள் அனைவருக்கும் வாய்த்து விடுவதில்லை!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் அரசால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அரசின் நிதி நிலை அறிந்து உடனே தொழிற்சங்கங்களும் இணக்கமான முடிவை எட்டுவதற்கு முன்வர வேண்டும். ஒருவேளை பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஏற்கனவே கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் சொகுசு பேருந்துகள் எவ்வாறெல்லாம் மக்களை வாட்டி வதைப்பார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
சொந்த ஊரில் பண்டிகை நாட்களைக் கொண்டாட மக்கள் என்றைக்கு மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொள்கின்றார்களோ அன்றைக்குத்தான் உண்மையான கொண்டாட்ட நாட்கள்!!, எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0