சென்னை நகரில் ஒட்டு போட்ட சாலைகளா…? சிங்கார சென்னை என்ன ஆச்சு…? கொந்தளிக்கும் தங்கர் பச்சான்…!
Author: Babu Lakshmanan19 November 2022, 4:26 pm
தமிழ் திரைப்பட இயக்குனரும், சமூக நல ஆர்வலருமான தங்கர் பச்சான் மன வேதனையை ஏற்படுத்தும் சம்பவங்கள் தமிழகத்தில் ஏதாவது நிகழ்ந்தாலோ அல்லது அந்த காட்சியை அவர் நேரில் பார்க்க நேர்ந்து விட்டாலோ அதை தனது ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக பதிவு செய்வது வழக்கம். சில நேரங்களில் கேலியும், கிண்டலும் அதில் கலந்து இருக்கும்.
குமுறல்
அது ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சிப்பது போலவும் அமைந்து விடுவதால் திமுகவினரிடமும் அதன் கூட்டணி கட்சியினரிடமும் அவர் நிறைய வாங்கி கட்டிக் கொள்வதும் உண்டு. என்றபோதிலும் சமூகத்தை பாதிக்கும் ஒரு விஷயத்தை தங்கர் பச்சான் உடனடியாக பகிர்ந்து கொள்ளத் தயங்குவதே இல்லை.
கடந்த மாதம் 20-ம் தேதி அவர் அப்படி பதிவிட்ட ஒரு தகவல் திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்திருந்தது என்றே சொல்லவேண்டும்.
அன்று அவர் தனது பதிவில் “சென்னையில் உள்ள எனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு 6.5 கி.மீ வந்தடைய 110 நிமிடங்கள் ஆனது. பயணத்தின் ஒவ்வொரு நொடியும் எவ்வாறு கடக்க போகிறோம் எனும் பதை பதைப்பிலேயே கழிகின்றன.
இதை சீர் செய்ய இதுவரை ஒரே ஒரு அரசு ஊழியரோ, அதிகாரியோ என் கண்களில் பட்டதில்லை. இலட்சக்கணக்கில் இவ்வழியாக பயணிக்கும் ஒருவர் கூட இது குறித்து வாய் திறப்பதில்லை. இன்னும் சில நாட்களில் பெரும் மழையை எதிர்கொள்ளப்போகும் இப்படிப்பட்ட சாலைகளால் சிங்காரச் சென்னை என்னாகுமோ?…”என்று
மனம் குமுறி இருந்தார்.
தத்தளித்த சென்னை
அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பிய அடுத்த பத்து நாட்களிலேயே அது நிஜமாகிப் போனது. ஆம், கடந்த மாதம் 31ம் தேதி முதல் இந்த மாதம் மூன்றாம் தேதி முடிய சென்னை நகரில் நான்கு நாட்கள் பெய்த 27 சென்டி மீட்டர் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கியதுடன் சாலைகளும் பெரும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறின. ஏராளமான சாலைகளில் பள்ளங்களும் ஏற்பட்டன.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி ஆட்டோ, கார், வேன், பேருந்து ஓட்டுநர்களும் கடும் அவதிக்கு உள்ளான காட்சிகளை டிவி செய்தி சேனல்கள் மூலம் பார்க்கவும் முடிந்தது.
இத்தனைக்கும் சென்னை நகருக்குள் அக்டோபர் 31-ம் தேதி ஒரே நாள் மட்டும்தான் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை பெய்திருந்தது. மற்ற மூன்று நாட்களையும் சேர்த்து 15 சென்டிமீட்டர்தான் மழை பதிவானது.
உண்மை
இந்த நிலையில்தான் சென்னை நகரம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சேதத்துக்கு உள்ளான சாலைகளை சீரமைக்க சென்னை மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கை குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது.
அது இயக்குனர் தங்கர் பச்சான் சென்னை நகர சாலைகளின் மோசமான நிலை குறித்து தெரிவித்த கருத்து உண்மைதான் என்பதை ஊர்ஜிதப் படுத்துவது போலவும் அமைந்திருக்கிறது.
அந்த செய்திக் குறிப்பில், “சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பிற சேவைத் துறைகளான மின்சாரத் துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சீரமைப்புப் பணிகள் மற்றும் பருவமழை ஆகியவற்றின் காரணமாக சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இவற்றை சீரமைக்க, மாநகராட்சியின் 200 வார்டுகளின் உதவிப் பொறியாளர்கள் இரவு நேரங்களில் சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு ஏற்பட்டுள்ள பள்ளங்களை கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2,646 சாலைகளில் 1,07,165 சதுர மீட்டர் பரப்பளவில் 10,553 பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் கடந்த 17ம் தேதி வரை 79,305 சதுர மீட்டர் பரப்பளவில் 9,035 பள்ளங்கள் சீர்செய்யப்பட்டுள்ளன” என்று
கூறியிருக்கிறது.
மேலும் பள்ளங்கள் சரி செய்யப்பட்ட சாலைகளில் பயன்படுத்தப்பட்ட ஜல்லிக் கலவை, தார்க்கலவை, குளிர் தார்க்கலவை, கான்கிரீட் கலவை குறித்தும் விரிவான விளக்கம் அளித்துள்ளது.
நையாண்டி
சென்னை மாநகராட்சியின் இந்த செய்தி குறிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில் நையாண்டி செய்து ஒரு கருத்தை பதிவு செய்தார்.
அது சென்னை மாநகராட்சி, சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்பதை மறைமுக குற்றச்சாட்டாக வைப்பது போல் அமைந்துள்ளது.
அவருடைய பதிவில் “நாம் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து ஒவ்வொரு ஆண்டும் சாலைகளை புதுப்பிக்கும் முறையும், பூம் பூம் மாட்டுக்காரன் சட்டை மாதிரி ஒட்டுப் போட்டு சாலைகளை பராமரிக்கிற முறையும் உலகத்தில் எங்கும் காண முடியாது! குதிரையில் சவாரி செய்வது போன்று பாலங்களில் பயணிக்கும் அனுபவம் கூடுதல் சிறப்பு!!” என்று கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார்.
மறைமுக செய்தி
அவருடைய இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்கள் வைத்து வருகின்றனர்.
தங்கர் பச்சான் கூறியிருப்பது பற்றி சமூக நல ஆர்வலர்கள் கூறியதாவது: “சென்னையில் நான்கு நாட்கள் தொடர்ந்து மழை பெய்த ஒரு சில நாட்களிலேயே 10,500க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ள தகவல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால் இந்த பாதிப்புக்கு மழைநீர் வடிகால் பணிகள், மின்சாரத் துறை, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சீரமைப்புப் பணிகளும் காரணம் என்று தற்போது சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்திருக்கிறது. இந்தப் பணிகளை எல்லாம் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்திருந்தால் சென்னை நகர சாலைகள் இந்த அளவிற்கு சேதம் ஆகி இருக்காது.
பல நூறு கோடி ரூபாய்களை செலவிட்டிருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்காது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெரிய அளவிற்கு மழை எதுவும் பெய்யவில்லை. அதனால்தான் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளங்கள் சாலைகளில் இருப்பதாகவும் அவற்றில் பெரும்பாலானவை சரி செய்யப்பட்டு விட்டதாகவும் சென்னை மாநகராட்சி கூறுகிறது. மழை இல்லாத சமயத்தில் இந்தப் பள்ளங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டிருப்பதன் மூலம் சென்னை நகர மக்களின் அச்சத்தை தணித்தும் இருக்கிறது.
அதேநேரம், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தால் இந்தப் பள்ளங்கள் இருக்கும் விஷயமே மூடி மறைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் அவசரக் கதியில் சாலைப் பள்ளங்களை மூடுவதால்தான் பூம் பூம் மாட்டுக்காரன் சட்டை மாதிரி ஒட்டுப் போட்டு சாலைகளை பராமரிக்கிற முறையை உலகத்தில் எங்கும் காண முடியாது! என்று இயக்குனர் தங்கர்பச்சான் மனம் குமுறி இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
நகரங்களுக்குள் போடப்படும் சாலைகள் தரமாக இருந்தால் குறைந்தபட்சம் 5 வருடத்திற்கு அதில் குண்டும் குழியும் விழாது. ஆழமான பள்ளங்களும் ஏற்படாது என்பதும் அவருடைய பதிவில் திமுக அரசுக்கு மறைமுகமாக உணர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே அவருடைய கருத்தை விபத்துகளை தவிர்க்க கூறும் நல்லதொரு யோசனையாகவே திமுக அரசு எடுத்துக்கொள்ளவேண்டும்” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
0
0