2011 வரலாறு மீண்டும் திரும்பும்… அதிமுகவுடனான கூட்டணி ராசியான கூட்டணி ; பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை…!!

Author: Babu Lakshmanan
20 March 2024, 6:09 pm

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – தேமுதிக இடையேயான தொகுதி பங்கீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியை இறுதி செய்து, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியையும் பங்கீடு செய்து முடித்து விட்டது. பாஜக ஒருபுறம் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. தேமுதிக கூட்டணிக்கு வருமா..? வராதா..? என்ற சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, முதற்கட்டமாக அதிமுகவின் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கும், தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து, ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணியை நம்பி அதிமுக கிடையாது என்று கூறினார். மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், ஆனால், இன்னும் தொகுதிகள் இறுதி செய்யவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில், இன்று மாலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் சுதீஷ் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, அதிமுக, தேமுதிக இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருவள்ளுர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “2011 வரலாறு மீண்டும் திரும்பும். 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடரும். அதிமுகவுடன் கூட்டணி என்பது ஒரு ராசியான கூட்டணி. எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. யார் யார் கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

ஜெயலலிதா இல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் இது. அதேபோல, விஜயகாந்த் இல்லாமல், தேமுதிக பொதுச்செயலாளராக நான் சந்திக்கும் முதல் நாடாளுமன்ற தேர்தல் இது. 2 தெய்வங்களின் ஆசியோடு எங்களின் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்,” எனக் கூறினார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!