பாஜகவுக்கு ரெட் சிக்னல்… அதிமுக பக்கம் திரும்பிய தேமுதிக மா.செ.க்கள்… முக்கிய முடிவை எடுக்கப்போகும் பிரேமலதா விஜயகாந்த்…!!
Author: Babu Lakshmanan7 February 2024, 3:42 pm
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக 12 தொகுதிகளையும், தேமுதிக 6 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பாமக நிர்வாகிகள் கூட்டணி தொடர்பாக முழு அதிகாரத்தையும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் கொடுத்து விட்டனர். மேலும், அவர்களின் கருத்துக்களையும் பாமக மேலிடம் கேட்டறிந்து வருகிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரங்களையும் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல, விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு, அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன் விஜயகாந்த் புகழை எடுத்துரைக்கும் வகையில் ஊர்தோறும் கூட்டங்கள் நடத்த கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கூட்டணி தொடர்பாக 79 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் விருப்பத்தை தெரிவித்து வந்தனர். அதில், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வேண்டும் என்றும், நாடாளுமன்றத் தேர்தலை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் முறையிட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே, தேமுதிக அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.