பாஜக அணியில் இணையும் தேமுதிக?.. இக்கட்டான சூழலில் பிரேமலதா முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 9:28 pm

பாஜக அணியில் இணையும் தேமுதிக?.. இக்கட்டான சூழலில் பிரேமலதா முடிவு!

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் திடீர் மறைவு அவருடைய மனைவியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதாவுக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு ஆகும். அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அரசியல் ரீதியாகவும் அது ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

இன்னொரு பக்கம் இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் எந்தவொரு அரசியல் கட்சியும் ஸ்தம்பித்துப் போய் விடுவதில்லை என்பதுதான் நிஜம்.

எவ்வளவு பெரிய அதிர்ச்சி என்றாலும் அது மூன்று நாட்களுக்குத்தான் என்று கிராமங்களில் பெரியவர்கள் கூறுவது உண்டு. அதனால் பிரேமலதாவும் அவருடைய குடும்பத்தினரும், தேமுதிகவினரும விரைவில் இந்த துயரிலிருந்து மீண்டு எழுந்து விடுவார்கள் என நிச்சயமாக நம்பலாம்.

அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்போம் என்பதை விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே வெளிப்படையாக பிரேமலதா சொன்னதில்லை. என்றபோதிலும் அவர் பாஜக அணியில் சேருவதற்குத்தான் அதிக ஆர்வம் காட்டினார் என்பது அரசியலில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஏனென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தவறான செயல்பாடுகளை பிரேமலதா கண்டிக்காத நாளில்லை. தமிழக மக்களுக்கு பெரிய அளவில் ஏதாவது பாதிப்பு என்றால் அதற்காக ஆளும் கட்சியை கடும் வார்த்தைகளால் போட்டு தாக்கியும் விடுவார்.

அண்மையில் சென்னையிலும், அதன் புறநகர் மாவட்டங்களிலும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களிலும் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது நிவாரணப் பணிகளை திமுக அரசு சரிவர மேற்கொள்ளவில்லை என்று பகிரங்கமாகவே அவர் குற்றம் சாட்டினார்.

அதேபோல் எண்ணூர் பெட்ரோலிய எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரேமலதா வாழ்வாதாரம் இழந்த மீனவர்களுக்கு தமிழக அரசு தலா 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப்போது அவர் தெரிவித்த இன்னொரு முக்கிய தகவல்தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக முடிவு செய்திருப்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்து விட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா “கடந்த வாரம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனையும் எண்ணூர் பெட்ரோலிய எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது சி.பி.சி.எல். நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கேபினட் அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். அதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் எனக்கு உறுதியளித்து இருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு, தற்போது தமிழக அரசியலில் இதுதான் பெரும் பேசு பொருளாக உள்ளது. இதன் மூலம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகிக்க மிக அதிக வாய்ப்புகள் இருப்பதும் தெரிகிறது. 

“இந்தத் தகவலிலும் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது. நிச்சயம் பாஜக கூட்டணியில்தான் தேமுதிக இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும்” என்று அரசியல் விமர்சகர்கள் உறுதியாக
கூறுகின்றனர்.

“ஏனென்றால் தேமுதிகவுக்கும், பாஜகவுக்கும் 2013ம் ஆண்டிலேயே நல்ல நட்புறவு ஏற்பட்டு விட்டது. அதன் அடிப்படையில்தான் 2014ம் ஆண்டு தமிழகத்தில் எந்தவொரு கட்சியும் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல் தலைவராக மோடியை அங்கீகரித்து அறிவிப்பும் வெளியிட்டார்.

அந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என பல கட்சிகள் இருந்தாலும் தேமுதிகவுக்குத்தான் அதிகபட்சமாக 14 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப் பட்டது. பாஜக கூட 7 இடங்களில்தான் களமிறங்கியது. தவிர அப்போது தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்ததும் விஜயகாந்தின் தேமுதிகதான்.

2014 தேர்தலில் அந்த கூட்டணிக்கு 18.5 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. கன்னியாகுமரியில் பாஜகவும், தர்மபுரியில் பாமகவும் வெற்றி பெற்றன.

இதனால்தான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை தேமுதிக இப்போது வரை கடும் கோபத்துடன் எந்த விமர்சனங்களையும் முன் வைத்ததில்லை. இந்த சுமுகமான அணுகுமுறை விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை மாறவே இல்லை. இனியும் மாறாது என்று உறுதியாக சொல்லலாம்.

மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் இனி இரு கழகங்களின் ஆட்சியும் தேவையே இல்லை என்று கடந்த சில வாரங்களாக பேசி வருகிறார்.

இதே நோக்கத்துடன்தான் 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஜயகாந்த் தேமுதிகவை திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக தொடங்கினார்.

2006ல் நடந்த தமிழக தேர்தலில் அவருடைய கட்சி தனித்தும் போட்டியிட்டது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தனக்கு அதிகம் தொடர்பே இல்லாத விருத்தாசலம் தொகுதியில் களம் இறங்கி அவர் வெற்றியும் கண்டார். 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் கூட எதிர்க்கட்சி தலைவராக ஆன பின்பு அடுத்த சில மாதங்களிலேயே அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை துணிந்து எதிர்க்கவும் செய்தார். அதேநேரம் திமுகவுடன் அவர் ஒருபோதும் தேர்தலில் கை கோர்த்தது இல்லை.

2016 தமிழக தேர்தலில் தேமுதிக தலைமையில் அமைந்த மக்கள் நலக் கூட்டணி கூட திமுக, அதிமுக இரண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டதுதான். ஆனால் அந்த கூட்டணியில் இருந்த மதிமுக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடைசி நேரத்தில் விஜயகாந்தின் காலை வாரி விட்டனர். இல்லையென்றால் மக்கள் நலக் கூட்டணி குறைந்தபட்சம் 18 சதவீத ஓட்டுகளை பெற்று 25 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் என்பது நிச்சயம். இப்படி கூட்டணிக் கட்சிகள் ஓட்டுகளை மாற்றி போட்டதால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது, தேமுதிகதான்.

2019 நாடாளுமன்ற தேர்தலில், டெல்லி பாஜக மேலிட விருப்பத்தின் பேரில்தான் அதிமுக கூட்டணியில் தேமுதிக கடைசியாக இணைந்து நான்கு தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டது.

2021 தமிழகத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு பலத்த அடி கிடைத்தது. டிடிவியின் கட்சி
2.4 சதவீதத்துடன் சுமார் 11 லட்சம் ஓட்டுகளை பெற்ற நிலையில் தேமுதிகவோ 0.48 சதவீதத்துடன் வெறும் இரண்டு லட்சம் ஓட்டுகளை மட்டுமே வாங்கியது. தொகுதிக்கு பத்தாயிரம் ஓட்டுகளை வாங்கி இருந்தால் கூட தேமுதிகவால் 6 லட்சம் ஓட்டுகளை பெற்றிருக்க முடியும். அப்படியென்றால் அமமுகவினர், தேமுதிகவுக்கு வாக்களிக்காமல் வேறு கட்சிகளுக்கு ஓட்டு போட்டுள்ளனர் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால் 2006ல் முதல் முறையாக தமிழக தேர்தலில் தனித்து களம் இறங்கிய தேமுதிக சுமார் 28 லட்சம் ஓட்டுகளை பெற்றது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே நின்று 31 லட்சத்து 25 ஆயிரம் ஓட்டுகளை குவித்தது. அந்த தேமுதிகவா அடுத்த 12 ஆண்டுகளுக்குள் இப்படி ஆகிப்போனது என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கிடையே 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் விஜயகாந்த் பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் போனதால் தேமுதிகவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். என்றாலும் கூட மக்கள் நலக் கூட்டணி கட்சிகளாலும், டிடிவி தினகரன் கட்சியாலும்தான் தேமுதிக பெரும் சரிவை சந்தித்தது என்பது வெளிப்படையான ஒன்று.

எனவே 2024 தேர்தலில் பாஜக தலைமையில் தேர்தலை சந்திப்பதே தங்களது கட்சிக்கு மிகுந்த பாதுகாப்பாக இருக்கும். கட்சியையும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க முடியும் என்று பிரேமலதா விஜயகாந்த் கருதுவதற்கு வாய்ப்பும் உள்ளது.

ஆகையால்தான் அரசியல் ரீதியாக மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடம் பிரேமலதா விஜயகாந்த் நல்ல நட்புறவை கொண்டிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

பாஜக கூட்டணியில் நான்கு தொகுதிகள் கிடைத்தால் கூட அதை தேமுதிக ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் எதார்த்த நிலை. அதனால் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை காத்திருக்காமல் விரைவில் பாஜக கூட்டணியில் இணையும் முடிவை தேமுதிக எடுக்கும் என்று நம்பலாம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் காரணங்களை அடுக்குகின்றனர். இவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது!

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 386

    0

    0