அன்று இனத்தையே கொன்று குவித்த பாவம்… ராஜபக்சேவை சும்மா விடாது.. விஜயகாந்த் கருத்து..!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 10:59 pm

சென்னை : அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததற்காக இலங்கை பிரதமர் ராஜபக்சே தற்போது அதற்கான தண்டனையை அனுபவித்து வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஒரு இனத்தை அழித்த ராஜபக்சே இன்று மிகப்பெரிய தண்டனையை அனுபவித்து வருகிறார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை பிரச்னை, விலைவாசி உயர்வு ஏற்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்தது. ராஜபக்சே சகோரதரர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மகிந்தாவின் ஆதாரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் தலைநகர் கொழும்புவில் வன்முறை வெடித்தது.

LTTE's abortive attempt to assassinate Gotabaya Rajapaksa | Daily FT

இந்நிலையில் போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். ஒரு இனத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இரக்கமற்ற முறையில் கொலை செய்து, அத்தனை மக்களையும் கொலை, கொள்ளை பலாத்காரம் செய்து மிக கொடூரமாக நடந்து கொண்ட ராஜபக்சேவிற்கு கிடைத்த மிகப்பெரிய தண்டனை.

முன்பெல்லாம் பாவம் செய்தால் அதற்கான தண்டனையை பெற பல ஆண்டுகள் ஆகும். ஆனால் தற்போது பாவத்திற்கான தண்டனையை கண்ணெதிரிலேயே அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகணும். தப்பு செய்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அதிகாரம் கையில் இருக்கும்போது மமதையின் காரணமாக மக்களை மதிக்காத யாராக இருந்தாலும் இதுதான் தீர்ப்பு என்பதை இன்றைக்கு இலங்கையில் ராஜபக்சேவுக்கு நடந்திருப்பது பறைசாற்றுகிறது.

vijayakanth - updatenews360

இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிகிறது. இனப்படுகொலை செய்யப்பட்ட போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரின் வயிறு எப்படி எரிந்ததோ, அந்த சாபம் தான் இன்றைக்கு இலங்கையே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்குதான் அந்த இனப்படுகொலைக்கே ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது.

அநீதி இழைத்த இலங்கையில் தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு இன்றைக்கு குளிர்ந்த பூமியாக மாறியிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு செய்த கொடுமைகளுக்காகவும், அப்பாவி தமிழர்களை கொன்றதற்காகவும் ராஜபக்சே குடும்பத்திற்கு கிடைத்த தண்டனையாக தான் இதை பார்க்கப்படுகிறது. இது வரவேற்கத்தக்கது. அதேசமயம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்கள் விரைவில் அதிலிருந்து மீளவேண்டும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பதற்கான ஒரே சான்று இந்த சரித்திரம். எனவே இன்றைக்கு தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவருடன் இறந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும். எனவே, அந்த மக்களை இன்று நாம் நினைத்து அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Eiffel Tower Fire Incident நயன்தாரா-விக்னேஷ் சிவன் சென்ற “ஈபிள் டவரில்”பற்றி எறிந்த தீ…அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்!
  • Views: - 1074

    0

    0