விஜயகாந்த் காலமானார்… சிகிச்சை பலனளிக்காததால் உயிர் பிரிந்தது ; கண்ணீர் விட்டு கதறி அழும் தொண்டர்கள்…!!
Author: Babu Lakshmanan28 December 2023, 9:07 am
மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். அவ்வப்போது அவருக்கு மருத்துவமனையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 2 வாரங்களாக சிகிச்சை பெற்றார். பின்னர் பூரண குணமடைந்த பிறகு கடந்த டிசம்பர் 11ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதே நேரத்தில் டிசம்பர் 14ல் நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். இந்த சூழலில், திடீரென நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இது விஜயகாந்த் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மியாட் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்கள் வருகை தருவார்கள் என்பதால் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படும் தகவலை அறிந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கண்ணீருடன் கதறியபடி குவிந்து வருகின்றனர். எனவே, அவரது வீட்டின் முன்பு தடுப்புகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, விஜயகாந்த்தின் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இந்த நிலையில், விஜயகாந்த் காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. விஜயகாந்தின் வீட்டின் முன்பு குவிந்த அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீருடன் கதறி அழுது வருகின்றனர்.