தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..? அதிமுக கூட்டணியில் தேமுதிக ; இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!
Author: Babu Lakshmanan23 February 2024, 6:32 pm
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் அதிமுக – தேமுதிக இடையே உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக 12 தொகுதிகளை கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல, 12 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று தேமுதிக நிபந்தனை போட்டுள்ளது.
இதையடுத்து, அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. எந்தக் கட்சியும் கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், அரசல் புரசலாக சில தகவல் மாறி மாறி வெளியாகி வருகின்றன. அதேபோல, தேர்தல் தேதி அறிவித்த உடனே கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக தயாராகி விட்டதாகவும், பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியது. அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் பிரேமலதாவின் வீட்டுக்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இதனை அதிமுக தரப்பில் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தேமுகவுடன் அப்படி எதுவும் பேச்சார்வார்த்தை நடத்தவில்லை என்றும், தேமுதிக தொகுதி எண்ணிக்கை மற்றும் பேரத்தை உயர்த்தவே இதுபோன்ற செய்தியை தேமுதிக தரப்பினரே வெளியிடுவதாகவும் சொல்லப்படுகிறது. எந்த தகவலும் உறுதியாக தெரியாத நிலையில், அதிக தொகுதிகள் எந்தப் பக்கம் ஒதுக்கப்படுகிறதோ… அந்தப் பக்கம் தேமுதிக கூட்டணி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.