ஆபாசமாக திட்டிய நிர்வாகிக்கு திமுகவில் மீண்டும் பதவியா?…. திருமாவுக்கு புதிய தலைவலி!…

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 7:42 pm

கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமத்தில் நடந்த ஒரு கொடூர நிகழ்வு, பத்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது விசிக தலைவர் திருமாவளவனுக்கு குடைச்சலை கொடுக்கும் ஒன்றாக மாறி இருக்கிறது என்பதும் கண் கூடு.

இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, அப்படி அந்த திருமலைகிரி கிராமத்தில் என்னதான் நடந்தது? அது எப்படி தமிழகம் முழுவதும் பட்டியல் இன மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது?…என்பது குறித்து சின்னதாக ஒரு ‘பிளாஷ் பேக்’:

சாதிய வன்மத்தை கக்கிய திமுக நிர்வாகி

சேலம் மாவட்டம் வீரபாண்டிக்கு அருகே உள்ளது திருமலைகிரி கிராமம். இங்கு அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுக் கோவில்களில் ஒன்றாகும்.

கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதியன்று அதே ஊரின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற இளைஞர் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிடவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அவ்வளவுதான், சாதிய வன்மத்துடன் இருப்பவர்களுக்கு அந்த இளைஞரின் நியாயமான கோரிக்கை கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே பஞ்சாயத்தை கூட்டியும் விட்டனர்.

குறிப்பாக, சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், திருமலைகிரி ஊராட்சி மன்றத் தலைவருமான மாணிக்கம் அந்த இளைஞருக்கு ஆபாச அர்ச்சனை நடத்தி அதிர வைத்து விட்டார். அதுவும் அந்த இளைஞரின் தந்தை மற்றும் ஊரார் முன்பாக மாணிக்கம் தனது மூர்க்க குணத்தை காட்டியுள்ளார்.

அந்த இளைஞரிடம் அங்கு நின்ற பட்டியலின மக்களை காண்பித்து,”இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாதை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ. எங்கேயும் போக முடியாது. எத்தனை நாள் நீ என் வீட்டுக்கு வந்த. உன் பையனுக்கு எங்கு போனது புத்தி? எங்க ஊருல பாதி பேரு கோவிலுக்கே வர மாட்டேன்கிறான். கோயிலே வேண்டாம். நீங்கள் எல்லாம் கோவிலுக்குள் சென்றால் கோவில் தீட்டாகிவிடும். உயர் சாதியினரான நாங்க கோவிலுக்கு வரமாட்டோம். எல்லாத்தையும் காலி பண்ணிருவேன், ஜாக்கிரதை” என்று மிரட்டியதுடன் அந்த இளைஞரின் நெஞ்சை பிடித்து தள்ளவும் செய்தார்.

இதில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அச்சில் ஏற்றக் கூடாத, ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருந்தார் என்பதும் வேதனைக்குரிய விஷயம்.

ஊரார் முன்னிலையில் திமுக நிர்வாகி மாணிக்கம் விடுத்த இந்த பகிரங்க மிரட்டலை சிலர் செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக ஊடகங்களிலும் பரவ விட்டனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பலரும் “இது பெரியார் பிறந்த மண், நாங்கள் தான் சமூக நீதியின் ஒரே காவலன் என்று மேடைதோறும் முழங்கும் திமுகவின் நிர்வாகி ஒருவரே இப்படி சாதிய வன்மத்துடன் பேசுவது சரியா? இதுதான் ஸ்டாலின் அரசின் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா?” என்று கொதித்து எழுந்தனர்.

கஸ்தூரி கண்டனம்

நடிகையும், பிரபல சமூக நல ஆர்வலருமான கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் மாணிக்கம் பேசிய ஆபாச வார்த்தைகளை எடிட் செய்யாமல் அப்படியே முழுமையாக வெளியிட்டு தமிழகத்தையே குலுங்க வைத்தார்.

இதில் வேதனையான ஒரு விஷயம் என்னவென்றால் பட்டியலின மக்களுக்காக என் இறுதி மூச்சு இருக்கும் வரை போராடுவேன் என்று மேடைதோறும் உரக்க முழக்கமிடும்
விசிக தலைவர் திருமாவளவன் திருமலைகிரி சம்பவம் தொடர்பாக வாயே திறக்கவில்லை.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்தே ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை திமுக தலைமை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும்
ஜனவரி 30ம் தேதி தற்காலிக நீக்கம் செய்தது. மேலும் பிரவீன்குமார் அளித்த புகாரின் பேரில்,சேலம் இரும்பாலை காவல் நிலைய போலீஸார் மாணிக்கத்தை
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைதும் செய்தனர். இனி நடப்பு நிலைக்கு வருவோம்.

மீண்டும் திமுகவில் பதவி

இந்த நிலையில் சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக மாணிக்கத்தை மீண்டும் நியமனம் செய்வதாகவும், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மீண்டும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததால் அதை அறிவாலயம் ஏற்றுக்கொண்டு அவரை அதே பதவியில் நியமித்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இச் செய்தி பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

10 மாதங்களுக்குப் பிறகு திமுக நிர்வாகி மாணிக்கம் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் அவரை அதே பதவியில் உட்கார வைத்திருப்பதால் அவர் எதற்காக கட்சியில் இருந்து முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பது பற்றி யாருக்கும் பெரிய அளவில் தெரிய வாய்ப்பில்லை என்று கருதி இப்படியொரு முடிவை
திமுக தலைமை எடுத்ததோ, என்னவோ தெரியவில்லை.

வேங்கைவயல் விவகாரம்

ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி வெளியுலகுக்கு தெரிய வந்த அடுத்த ஒரே மாதத்தில் சேலம் திருமலைகிரி சம்பவமும் நடந்ததால், இந்த இரண்டு நிகழ்வுகளின் வீரியமும் ஒரே மாதிரியாக அமைந்துவிட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பட்டியலின மக்கள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

தற்போது மாணிக்கத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டு இருப்பதுடன் முன்பு போலவே அவருக்கு பொறுப்பும் வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

ஏனென்றால் சாதிய பாகுபாடு தமிழகத்தில் மட்டுமல்ல நாட்டிலேயே கூடாது என்று கொள்கை முழக்கமிடும் திமுக, மாணிக்கத்தை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்திருக்கவேண்டும். அப்போதுதான் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் பற்றி 70 ஆண்டுகளுக்கும் மேலாக பேசி வரும் திமுக பட்டியலின மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது என்று அர்த்தம் என சமூக நல ஆர்வலர்கள் கடந்த பிப்ரவரி மாதம் குரல் கொடுக்கவும் செய்தனர்.

ஆனால் அதை திமுக காதில் போட்டுக் கொண்ட மாதிரியே தெரியவில்லை. அதற்கான காரணம் அந்த சமூக நல ஆர்வலர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.

“தமிழகத்தில் பட்டியலின மக்கள் சந்தித்து வரும் வேங்கைவயல், திருமலைகிரி போன்ற பல்வேறு வேதனை சம்பவங்களை விசிக தலைவர் திருமாவளவன் கண்டும் காணாமல் இருப்பது அவருடைய செல்வாக்கை அவர் சார்ந்த சமூகத்தினரிடையே நிச்சயம் சிதைத்து விடும். ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்பட்டது போலவே தெரியவில்லை. எங்கே இது தொடர்பாக வாய் திறந்து பேசினால் முதலமைச்சர் ஸ்டாலினின் கடும் கோபத்திற்கு உள்ளாக நேரிடுமோ என்று பயந்து திருமாவளவன் மௌனம் காப்பது போல் தெரிகிறது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மவுனமாக இருக்கும் திருமாவளவன்

“இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் யார் சமூக நீதியை அதிகமாக ஆதரித்து பேசுகிறார்களோ அவர்களது ஆட்சியிலேயே, அதுவும் தனது கட்சியின் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவின் ஆட்சியிலேயே பட்டியலின மக்களுக்கு இதுவரை மாநிலத்தில் இல்லாத அளவிற்கு இழைக்கப்படும் அவலம் பற்றிய முணுமுணுப்பைக் கூட வெளியிட முடியாதவாறு திருமாவளவனின் நிலை ஆகிப் போய்விட்டதுதான்.

வேங்கை வயல் கொடூரத்தை பொறுத்தவரை, பட்டியலின மக்களுக்கு அநீதி இழைத்த குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்காக திமுக அரசிடம், திருமாவளவன் எந்த அழுத்தமும் கொடுத்ததாக தெரியவில்லை.

கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி திமுக என்பதற்காக இதையெல்லாம் திருமாவளவன் பேசாமல் தவிர்க்கிறாரா? என்ற கேள்வி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அனைத்து தரப்பினரிடமும் இன்று கோபத்துடன் பேசப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது.

கனிமொழி கூட்டத்தில் பாலியல் தொல்லை

அதேநேரம் திமுகவின் நிலையோ இன்னும் பரிதாபமாக இருப்பது பளிச்சென்று தெரிகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி இரவு சென்னையில் கனிமொழி எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி இருவரும் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டத்தின் பாதுகாப்பிற்கு வந்த திருமணமாகாத 22 வயது பெண் காவலர் ஒருவர் திமுக இளைஞரணியை சேர்ந்த பிரவீன், ஏகாம்பரம் என்னும் இருவரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். முதலில் அந்த பெண் காவலர் கண்ணீர் விட்டு அழுதபடி புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ, பிரபாகர் ராஜா போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த இருவரையும் விடுவித்து விட்டார்.

ஆனால் எப்போதும் பெண்ணுரிமை பற்றி பேசும் கனிமொழி கலந்துகொண்ட ஒரு பொதுக்கூட்டத்திலேயே ஒரு பெண் காவலருக்கு நடந்த அக்கிரமம் பற்றிய செய்தி தேசிய அளவில் ஆங்கில ஊடகங்களில் பரபரப்புடன் வெளியானது. அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் கழித்தே பிரவீனும், ஏகாம்பரமும் கைது செய்யப்பட்டனர். என்றபோதிலும் இது தொடர்பான சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

திருமாவளவன் பேசாதது ஏன்?

இந்த நிலையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான பெண் காவலர் கோர்ட்டில் திமுகவினருக்கு எதிராக சாட்சியம் அளிக்கக் கூடாது என்று அவர் பணிபுரியும் காவல் நிலையத்திற்கே சென்று கடந்த 12ம் தேதி இரவு கே கே நகர் திமுக செயலாளர் ஒருவர் மிரட்டல் விடுத்ததாக அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது.

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி சோனியா, பிரியங்கா, மெகபூபா முக்தி, சுப்ரியா சுலே, டிம்பிள் யாதவ் உள்ளிட்ட பல கட்சிகளின் பெண் தலைவர்களை சென்னைக்கு வரவழைத்து மகளிர் உரிமை மாநாடு நடத்த தீவிர ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நேரத்தில்தான் பெண் காவலருக்கு திமுக நிர்வாகி இந்த மிரட்டலை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது”என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

தான் பங்கேற்ற ஒரு கூட்டத்திலேயே திமுக இளைஞர் அணியினர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தை இன்றுவரை கனிமொழியே பேச மறுக்கும் போது, தான் சம்பந்தப்படாத வேங்கை வயல், திருமலைகிரி அவல நிகழ்வுகள் குறித்து திருமாவளவன் மட்டும் வாய் திறந்து பேசுவார் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை!

  • Atlee and assistant directors relationship அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
  • Views: - 445

    0

    0