திமுக, அதிமுக வேட்புமனு நிராகரிப்பு : சாதியை காரணம் காட்டி சுயேட்சைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அட்டையை ஒப்படைக்க வந்த மக்கள்!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2022, 8:48 pm
திண்டுக்கல் : பழனி அருகே திமுக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, சுயேட்சை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை, குடும்பஅட்டையை அரசிடமே ஒப்படைக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15வது வார்டுகளில் அனைத்து வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் குறிப்பாக 15வது வார்டு பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் அதிகளவில் இருப்பதால் திமுக மற்றும் அதிமுக சார்பில் பட்டிய்ல இனத்தை சேர்ந்த பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு திமுக சார்பில் அருக்காணியும், அதிமுக சார்பில் லட்சுமி என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இன்று கீரனூர் பேரூராட்சியில் 15வார்டில் போட்டியிடும் திமுக,அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்திருந்த அமராவதி என்பவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து 15வது வார்டில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி கிராமநிர்வாக அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாவது :- கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டில் எங்கள் சமூகம் அதிகளவில் வசித்து வருவதாகவும், அதனாலேயே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் சார்பில் போட்டியிட எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தங்களது சமூகத்தை சேர்ந்த பெண் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாகவும், அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் காரணமின்றி நிராகரிக்கப்பட்டு, 15 வார்டுக்கு சம்பந்தமில்லாத, வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை அதுவும் திமுகவை சேர்ந்த பெண்ணை தங்களது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்யவைத்து, அவரே போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும், இது தங்களது சமூகத்திற்கு செய்யும் துரோகம் எனவும் கூறினர்.
எனவே தங்களது வார்டில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமெனவும், இல்லையென்றால் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை அரசிடமே திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கீரனூர் போலீசார், வருவாய்த்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0