திமுகவுக்கு செக் வைக்கும் காங்., விசிக…! பாமக-வால் திண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின்… கூட்டணியில் கலகல!!
Author: Babu Lakshmanan5 December 2022, 7:50 pm
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது இருப்பதை விட திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என்ற தகவல் கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் 39 நாடாளுமன்ற தொகுதிகளையும், புதுச்சேரியையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பதில் திமுக தீவிரம் காட்டுவதும் உண்மையே!
அதை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வப்போது நாற்பதும் நமதே நாடும் நமதே என்று மேடைகளில் உற்சாக முழக்கமிடுவதையும் கேட்க முடிகிறது.
மத்தியில் எதிர்க்கட்சிகள் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் அப்போது, தேசிய அளவில் திமுக வலிமையான கட்சியாக திகழ்ந்தால்தான் தங்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியத்துவமும் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் அவர் இப்படி பேசுகிறார் என்று கூறப்படுவதும் உண்டு.
இதனால்தான் டாக்டர் ராமதாஸின் பாமகவையும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் தங்கள் அணியில் சேர்ப்பதற்காக இப்போதே திரை மறைவில் பேச்சு வார்த்தைகளை திமுக தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது.
ஆனால் பாமகவை, திமுக கூட்டணியில் இணைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியும், காங்கிரஸும் வெளிப்படையாகவே முட்டுக்கட்டை போடுவதையும், கடும் எதிர்ப்பு தெரிவிப்பதையும் காண முடிகிறது.
மிக அண்மையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஒரு டிவி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் இதைப் போட்டு உடைத்திருக்கிறார்.
அவர் கூறும்போது, “பாஜகவும், பாமகவும் இணைந்திருக்கும் கூட்டணியில் ஒருபோதும் விசிக சேராது என்பதை உறுதியாக கூறுகிறேன். ஏனென்றால் பாஜக மதவாதத்தையும், பாமக சாதிய வாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சிகள்” என்று அதிரடி காட்டி இருக்கிறார்.
இதேபோல் சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது, “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் குறைந்த பட்சம் 15 தொகுதிகளாவது கேட்டுப் பெறவேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
புதுவை முன்னாள் முதலமைச்சரான நாராயணசாமியோ புதுச்சேரியை பொறுத்தவரை, சட்டப்பேரவையில் திமுக 6 எம்எல்ஏக்களை கொண்டிருந்தாலும் கூட
நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமையும். திமுக எங்கள் அணியில் பிரதான கட்சியாக இருக்கும் என்று ஒரு சரவெடியை கொளுத்தி போட்டார்.
இந்த நிலையில்தான், தமிழக காங்கிரஸின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அமெரிக்கை நாராயணன், தனது பங்கிற்கு ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.
ஒரு நாளிதழுக்கு அவர் அளித்தபேட்டியில், “கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. அதன் பிறகு விமர்சிக்க வேண்டியதுதான். திமுக சீட் கொடுக்காவிட்டால், அவர்களுக்குத்தான் கஷ்டம். கூட்டணியால் நாங்கள் பல இடங்களில் வென்றிருந்தாலும், பெரிய பயன் திமுகவுக்குத்தான். அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். ஒரு கட்சி வலிமையாக இருந்தால்தான், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு அழைப்பார்கள். காங்கிரஸ் தனதுநிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.
காங்கிரஸ் எல்லா சமூகத்தினருக்காகவும் போராட வேண்டும். பூநூலை அறுப்பேன் என ஒருவர் கூறியபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்காகவும் குரல் கொடுப்பதுதான் மதச்சார்பின்மை. கூட்டணிக்காக அமைதி காப்பது மதச்சார்பின்மை இல்லை” என்று ஆவேசப்பட்டு இருக்கிறார்.
“திருமாவளவன் கூறுவதை பார்த்தால், திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் தாங்கள் வெளியேற நேரிடும் என்பது பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம், பாமக சாதிய ரீதியில் செயல்படுகிறது என்று விசிக தலைவர் குற்றம் சாட்டினாலும் கூட, அவருக்கு வேறொரு அச்சமும் உள்ளது” என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
“ஏற்கனவே திமுக கூட்டணியில் பாமகவும், விசிகவும் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டு உள்ளன. எனவே பாமக இருக்கும் அணியில் விசிக இருக்காது என்று கூறுவதை ஏற்க கடினமாக உள்ளது.
அதேநேரம் திமுக அணிக்குள் பாமக வந்தால் அக்கட்சி நான்கு தொகுதிகளுக்கு குறையாமல் எதிர்பார்க்கும். மக்கள் நீதி மய்யத்தையும் சேர்த்துக் கொண்டால் அதற்கு குறைந்தபட்சம் ஒரு தொகுதியாவது கொடுக்க வேண்டிய கட்டாயம் திமுக தலைமைக்கு ஏற்படும். இந்த வகையில் பார்த்தால், தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எண்ணிக்கை ஒன்றாக குறையலாம் என்று விசிக கருத வாய்ப்பு உள்ளது.
அது தங்களது கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு தடை போடுவது போல இருக்கும் என்றும் விசிக நினைக்கலாம்.
மேலும் இந்த முறை திமுகவிடம் எப்படியும் மூன்று தொகுதிகளாவது வாங்கி விட எண்ணும் விசிகவின் திட்டத்தை தகர்ப்பது போலவும் உள்ளது.
அதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளை திமுக குறைத்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் திருமாவளவன் இப்படி கூறியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் 2011சட்டப்பேரவை தேர்தலை விட தற்போது விசிக வலிமை அடைந்திருக்கிறது என்று அவர் உறுதியாக நம்புகிறார். தாங்கள் இல்லாமல் திமுக கூட்டணி அபார வெற்றி பெற முடியாது என்பதும் திருமாவளவனின் கணக்காக உள்ளது. அதனால் பாமகவை, கூட்டணியில் திமுக சேர்க்கவே கூடாது என்பதில் அவர் மிகுந்த உறுதியாக இருக்கிறார். ஆகவேதான் திமுக தலைமை எடுக்கும் முடிவை திருமாவளவன் துணிந்து எதிர்க்கிறாரோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
அதேபோல் எதிர்க்கட்சிகள் அனைத்தும், காங்கிரஸ் தலைமையில்
ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்கவேண்டும் என்பதும் திருமாவளவனின் வலியுறுத்தலாக உள்ளது.
தமிழக காங்கிரசை பொறுத்தவரை, திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டால் தமிழகத்தில் தங்களுக்கு ஐந்து தொகுதிகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று நினைக்கிறது. இதற்கும் கூடுதலாக நீங்கள் தொகுதிகளை எதிர்பார்த்தால் கூட்டணியிலிருந்து வெளியேறி விடுங்கள் என்று திமுக தலைமை கறாராக கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
அதனால் திமுக கூட்டணியில் பாமக சேர்ந்தால், தங்களுக்குரிய முக்கியத்துவம் குறைந்து போய்விடும் என்பதால் தொகுதி பேர விஷயத்தில் தமிழக காங்கிரஸ் கறாராக நடந்து கொள்ளவேண்டும். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. திமுக சீட் கொடுக்காவிட்டால், அவர்களுக்குத்தான் கஷ்டம் என்று காங்கிரஸில் குரல்கள் உரக்க ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் திமுக தலைமைக்கு கூட்டணியை பலப்படுத்தும் விஷயத்தில் விசிக வெளிப்படையாகவும், காங்கிரஸ் மறைமுகமாகவும் நெருக்கடி அளிக்கத் தொடங்கி இருக்கின்றன என்பதே உண்மை” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக எப்படி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!