திமுக கூட்டணியில் புகைச்சல்…. திடீரென பாஜக பக்கம் சாய்ந்தது ஏன்..?

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2022, 7:11 pm

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அண்மையில் பிரதமர் மோடி வந்து சென்றது முதலே திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பும், புகைச்சலும் ஏற்பட்டு இருப்பதை காணமுடிகிறது. முன்பு அரசல் புரசலாக இருந்த மனக்குமுறல் தற்போது பூதாகரமாகவும் உருவெடுத்துள்ளது.

மோடி வருகை : ஆப் ஆன திமுக கூட்டணிகள்

ஜூலை 28-ம் தேதி 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக மோடி சென்னை வந்தபோது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை Go back Modi என்று கருப்பு பலூன்களை பறக்க விட்டது, உரக்க கோஷங்களை எழுப்பியது போல இப்போதும் அதே மாதிரி நடந்து கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது.

தற்போது திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் அக்கட்சியினர் இதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பது கூட்டணி கட்சியினருக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

குறிப்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதுபற்றி சிறிது கூட கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. அதற்கு காரணம் அவருடைய கட்சி திமுகவின் அங்கமாகவே
மாறிவிட்டது என்பதுதான் என்கிறார்கள்.

மோடி வருகைக்கு காங்., எதிர்ப்பு

ஆனாலும் தமிழக காங்கிரசும், விசிகவும் பிரதமர் மோடியின் சென்னை வருகையின் போது மிகுந்த அதிருப்தியில் இருப்பதை உணர முடிந்தது.

சென்னையில் மாநகர பேருந்து நிறுத்த நிழற்குடை ஒன்றில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டும் இடம் பெற்றிருந்தது. பாஜகவினர் சிலர் இந்த விளம்பரத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சில அமைப்பினர் கருப்பு மை கொண்டு மோடியின் படத்தை அழித்ததால் இந்த செயலில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைதும் செய்தனர்.

கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்

இதனால் எரிச்சல் அடைந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, “விளம்பரத்தில் பாஜகவினர்தான் அத்துமீறி பலவந்தமாக பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜகவினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது” என்று கொந்தளித்து இருந்தார்.

இந்த நிலையில்தான் சென்னை வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டங்கள், கோஷங்கள் மற்றும் வலைதளங்களில் கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கையும் விடுத்தார். இதனால் திமுக கூட்டணி கட்சிகள் கடும் எரிச்சலுக்கு உள்ளாகின.

மோடியே திரும்பி போ

என்றபோதிலும் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியம் தனது ஆதரவாளர்களோடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் “மோடியே திரும்பி போ” என்று கோஷங்களை எழுப்பினார்.

அவர் வெளியே இருந்தால், தொடர்ந்து இதுபோல கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபடத் தயங்க மாட்டார் என்பதால் அவர் வீடு திரும்பிய பின்பு, தனது ஆதரவாளர்களுடன் புதுவண்ணாரப்பேட்டை வீட்டிலேயே போலீசாரல் சிறை பிடிக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.

அரக்கோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் திண்டுக்கல்லில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் காங்கிரசார் கைதாகினர்.

அமைச்சரிடம் காங்கிரஸ் கிடுக்குப்பிடி கேள்வி

இதற்கிடையில், ‘மானமும் வீரமும் மறத்தமிழர்க்கழகு’ என்ற தலைப்பில், அமைச்சர் பொன்முடிக்கு சில கேள்விகளை கேட்டு, காங்கிரஸ் தரப்பில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறப்படும் ஒரு தகவல், திமுக தலைமையை வெகுவாக அதிர்ச்சியடைய வைத்தது.

அந்த பதிவில், “மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா அழைப்பிதழில், மத்திய அமைச்சர் முருகன் பெயரை, இணை வேந்தரான என் பெயருக்கு முன் போட்டு ஆளுநர் ரவி, பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் செய்கிறார். எனவே, பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக கூறிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அறிவித்தபடி அவ்விழாவை புறக்கணித்தார். ஆனால், பிரதமர் மோடி பங்கேற்ற, சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா அழைப்பிதழிலும், மதுரை காமராஜர் பல்கலையில் செய்தது போலவே, முருகன் பெயரை பொன்முடி பெயருக்கு முன் போட்டு, தன் அதிகாரத்தை நிரூபித்திருக்கிறார், ஆளுநர் ரவி. பொன்முடி மானத்தோடு புறக்கணிப்பாரா? மண்டியிட்டு சரணடைவாரா?என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. எனினும் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில், பொன்முடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு விசிக எதிர்ப்பு

இன்னொரு பக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பிரதமர் மோடி வருகையின் போது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக அவருடைய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசை மறைமுகமாக கருத்து தெரிவிக்க வைத்திருப்பது தெரிகிறது.

வன்னியரசு தனது ட்விட்டர் பதிவில், #Go Back Modi என்னும் இந்த புரட்சி முழக்கம் 2024 தேர்தலில் இந்தியா முழுக்க எதிரொலிக்க செய்வோம்!” என்று ஆவேசப்பட்டிருந்தார்.

கல்வி அமைச்சரை வசைபாடிய விசிக

இன்னொரு பதிவில் அவர் , “கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்து, திருவள்ளூரில் ஒரு மாணவி மரணித்துள்ளார். இருவர் உடலும் நல்லடக்கம் செய்தாலும், மாணவிகளின் நல்லடக்கத்தில் பங்கேற்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட அமைச்சர் அன்பில் மகேஷ் ஏன் போகவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அமைச்சர் பதில் சொல்வாரா?”என்று பொங்கியுள்ளார்.

வன்னியரசின் இந்த இரண்டு பதிவுகளையும் கூர்ந்து கவனித்தால், அவை திமுக அரசுக்கு எதிராக வெளியிட்டிருப்பது தெரியும்.

திமுக மீது காங்கிரஸ் கோபம்

இதுகுறித்து மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நேரில் சென்று செஸ் ஒலிம்பியாட் அழைப்பிதழ் கொடுத்ததாக வெளியான தகவல் காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ராகுல் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறார்.

புறக்கணித்த காங்கிரஸ்

இதைதொடர்ந்தே தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செஸ் ஒலிம்பியாட் விழாவை புறக்கணிப்பார்கள் என்று அறிவித்தார் என்கிறார்கள்.

இதேபோல் முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், திமுக அரசில் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராகவும் உள்ள பீட்டர் அல்போன்சை
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று ராகுல் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவரும் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதேநேரம் கூட்டணி கட்சியான காங்கிரஸ், திமுக அரசு நடத்திய சர்வதேச செஸ் ஒலிம்யாட் போட்டி தொடக்க விழாவை புறக்கணித்ததுடன், அமைச்சர் பொன்முடியை அவமதிக்கும் வகையில் விமர்சித்து இருப்பது கூட்டணி உறவில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் குடைச்சல்

தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு,
வரும் 5-ம் தேதி விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் சமீபகாலமாக திமுக கூட்டணி எம்எல்ஏவாக இருந்தும்கூட தொகுதியில் என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தொடர்ந்து கூறி வருகிறார். இவையெல்லாமே ஆளும் கட்சியான திமுகவுக்கு எதிரான நடவடிக்கைகளாகவே பார்க்கப்படுகிறது.

இப்படி திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்துகொள்ளும் விதம் குறித்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவிக்க தொடங்கியிருக்கின்றன. இன்னொரு பக்கம், பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் நட்பு பாராட்டுவதையும் கூட்டணி கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து திமுக கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்கிறதோ என்ற திகைப்பும் கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளது” என்று
அந்த மூத்த அரசியல் விமர்சகர்கள், கூறுகின்றனர்.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 713

    0

    0