திமுக கூட்டணியில் குஸ்தி ஆரம்பம்?… தனித்து களமிறங்கிய கம்யூனிஸ்டுகள், விசிக… பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

Author: Babu Lakshmanan
20 September 2022, 4:46 pm

மின் கட்டண உயர்வு

திமுக அரசு மின் கட்டணத்தை செப்டம்பர் 10-ம் தேதி முதல் 52 சதவீதம் வரை உயர்த்தி இருப்பதற்கு அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது பற்றிய அறிவிப்பு வெளியான உடனேயே தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இது ஏழை, எளிய, நடுத்தர வகுப்பு மக்களையும், சிறு-குறு தொழில் செய்வோரையும் வெகுவாக பாதிக்கும் என்பதால் இந்த உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கையும் வைத்தன.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் செப்டம்பர் 16-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்து 300க்கும் மேற்பட்ட இடங்களில் அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். செங்கல்பட்டு நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவரும் கலந்துகொண்டு திமுக அரசை கடுமையாக சாடினார்.

திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளின் தலைவர்கள் இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் தமிழக மக்களிடம் நம்பிக்கை இழக்க நேரிடும், அது தேர்தலில் தங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்று பயந்தோ என்னவோ அவர்களும் அதிருப்தியை பதிவு செய்தனர்.

கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விடுத்த அறிக்கையில்,
“உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி, பொதுமக்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்லாயிரக்கணக்கான மனுக்கள் அளித்தும் வலியுறுத்தினர். ஆனால் அவைகளையெல்லாம் புறந்தள்ளி ஏற்கனவே உத்தேசித்த மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Balakrishnan - Updatenews360

மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறு-குறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துவதோடு,
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி, மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறும்போது “தமிழக அரசு மின்கட்டணத்தை மிகக் கடுமையான அளவில் உயர்த்தியிருப்பது மக்களிடம் ஆத்திரத்தையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் மின்நுகர்வோர் கூறிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து, உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை நிறுத்தி வைத்து, நிலைக் கட்டணம் வசூலிப்பதையும், ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு செய்யும் திட்டத்தையும் ரத்து செய்யவேண்டும். மின்கட்டணத்தை வெகுவாக குறைத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

திருமா., கோரிக்கை

விசிக தலைவர் திருமாவளவன் “தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் கருத்துச் சொல்லியிருக்கிறார். அதை நியாயப்படுத்த முடியாது. சாதாரண ஏழை, எளிய மக்களைப் பாதிக்காத வகையில் மின் கட்டணம் இருக்கவேண்டும். எனவே இந்த மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் பின்பு மார்க்சிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்டும் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின.

முரசொலி குட்டு

இதையடுத்து கூட்டணியில் இருந்துகொண்டே உரத்த குரலை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் கண்டனத்தை கட்டுரை வாயிலாக தெரிவித்தது.

அதில், “திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே சிண்டு முடிந்து, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்?ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம்’ என சாட்டையை சுழற்றி இருந்தது.

பொங்கிய திருமா.,

இந்த நிலையில்தான், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்காக 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திமுக அரசு முடிவு செய்துள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று மக்களை சந்தித்தார்.

அப்போது ஏகனாபுரம் கிராமத்திற்கு வந்த அவரை முற்றுகையிட்ட வயதான மூதாட்டிகள் கதறி அழுதபடி “எங்களுக்கு விமான நிலையமே வேண்டாம். நாங்கள் தொடர்ந்து இங்கேயே வசிக்க எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கவேண்டும்”
என கோரிக்கையும் வைத்தனர்.

பின்பு திருமாவளவன் முன்னிலையிலேயே “வேண்டாம் வேண்டாம் விமான நிலையம் வேண்டாம்”, “அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே” என்ற எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி, தங்களது கண்டனத்தையும் தெரிவித்தனர்.

அப்போது திருமாவளவன் “உங்களது கோரிக்கை குறித்து நிச்சயமாக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். உங்கள் போராட்டம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் ’1,350 ஏக்கர் குடியிருப்புகள், விளை நிலங்கள் அல்லாத அந்தப் பகுதிகளில் ஏரிகளும், குளங்களும், குட்டைகளும், ஓடைகளும் இருக்கின்றன. 1,350 ஏக்கர் பரப்பளவுள்ள நீர் பிடிப்பு பகுதிகளை சேதப்படுத்தி அழித்தால்தான் விமான நிலையம் கட்ட முடியும் என்கிறபோது தமிழக அரசு இரட்டை கொள்கையைக் கையாள்கிறதோ?என்ற கேள்வி எழுகிறது. சாதாரண மக்களுக்கு ஓர் கொள்கை. இது போன்ற வளர்ச்சி என்ற பெயரில் நீர்பிடிப்புகளை அழிப்பதில்லை தவறில்லை என்பது சரி என்றால், மக்கள் குடியிருக்கும் பகுதி நீர் பிடிப்புப்பகுதியாக இருந்தால் அதுவும் சரிதான் என்று சொல்ல நேர்கிறது” என்றார்.

பூடாகமாக எச்சரிக்கை

“தங்களது கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட, விசிக ஆகிய மூன்று கட்சிகளும், திமுக அரசுக்கு எதிராக மெல்ல மெல்ல போர்க்கொடி உயர்த்துவது திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக தேர்தல் அறிக்கையில், திமுக கூறியிருந்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான மாதம் ஒருமுறை மின் அளவீடு கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மார்க்சிஸ்ட் நினைவுபடுத்தி வலியுறுத்தியதை முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதை இப்படியே விட்டுவிட்டால் திமுக அளித்த மற்ற தேர்தல் வாக்குறுதிகளான குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய், கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றவேண்டும் என்று இந்த மூன்று கட்சிகளும் வலியுறுத்த வாய்ப்பு உள்ளது.

மேலும் மின் கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்ததை விரும்பாத திமுக தலைமை ‘மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்தில் கூட மின் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. தோழர் பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாது இருக்க முடியாது’ என்று முரசொலி மூலம் கிண்டலும் செய்தது.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தன் பங்கிற்கு தமிழகத்தை விட கேரளாவில் மின் கட்டணம் அதிகம் என்று கடுப்புடன் தமிழக மார்க்சிஸ்ட் கட்சியை மறைமுகமாக கண்டித்தார்.

இப்போது திருமாவளவன் நேரடியாக பரந்தூர் பகுதிக்கு சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டதுடன் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக இரட்டை கொள்கையை தமிழக அரசு கையில் எடுத்து இருக்கிறதா? என்று கேள்வியும் எழுப்பி உள்ளார். இது அறிவாலய வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை, ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். அதுவும் ஏகனாபுரம் மக்களிடம் உங்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள் என்று திருமாவளவன் கூறியது திமுக தலைமையை எரிச்சலடைய வைத்துள்ளது, என்கிறார்கள். காரணம், முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி கனவை இவர்கள் தகர்த்து விடுவார்கள் போலிருக்கிறதே என்ற அச்சம் திமுகவுக்கு வந்து விட்டதுதான்.

இந்த நிலையில்தான், திமுக தனிப்பட்ட முறையில் ஒரு சர்வே எடுத்ததாகவும், அதில் திமுக தனித்துப் போட்டியிட்டால் கூட 2024 நாடாளுமன்ற தேர்தலில் 34 இடங்களுக்கும் மேல் எளிதில் கைப்பற்றிவிடும் என்று தெரிய வந்திருப்பதாகவும் ஒரு தகவலை அறிவாலய வட்டாரம் கசிய விட்டிருக்கிறது. இதன் மூலம் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக இல்லாமலும் எங்களால் பெரிய அளவில் வெற்றியை பெற முடியும். எங்களுக்கு ஆதரவாக நீங்கள் செயல்படவில்லை என்றால் தேர்தலில் நஷ்டம் உங்களுக்குத்தான் என்று பூடாகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது போலவே தெரிகிறது.

அதேநேரம் இது தங்களுக்கு எதிராக அரசியல் செய்யத் தொடங்கியிருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதற்காக திமுக தரப்பில் வெளியிடப்பட்ட தகவலோ என்று சந்தேகிக்கவும் தோன்றுகிறது. எது எப்படியோ தங்கள் ஆட்சிக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் எந்த விமர்சனமும் வைக்ககூடாது என்று திமுக விரும்புவது தெரிகிறது. இதை பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் மூவரும் உணர்ந்தே உள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் சிறு சிறு பிரச்சனை என்றாலும் கூட அவற்றை பெரும் போராட்டங்களாக மாற்றியபோது திமுக தலைமை நன்றாகவே ரசித்தது. ஆனால் இப்போதோ விவகாரம் பெரியதாக இருந்தாலும் அதுபற்றி பொது வெளியில் பேசக்கூடாது என்று திமுக தலைமை நினைக்கிறது என கூட்டணி கட்சிகளின் தோழர்கள் வேதனையோடு புலம்புவதையும் கேட்க முடிகிறது. இது திமுக கூட்டணிக்குள் பூசல் உருவாகி இருப்பதையே வெளிக் காட்டுகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 552

    0

    0