தமிழகத்தில் திமுக – பாஜக கூட்டணி? அதிர வைத்த அதிமுகவின் வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 August 2024, 12:39 pm

தமிழகத்தில் பாஜகவும் திமுகவும் கடுமையாக மோதி வந்தது. ஒருவர் மீது ஒருவர் கடுமையாக விமர்சனத்தை வைத்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சி அதிமுகவா.? பாஜகவா.? என்ற கேள்வியானது எழுந்தது. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக, பாஜக உடனான கூட்டணி தொடர்ந்தால் தாங்கள் பின்னுக்கு தள்ளி விடுவோம் என்ற காரணத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட இரண்டு கட்சிகளும் தோல்வியை தழுவியது. அதே நேரத்தில் திமுக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பாஜக திமுக இடையிலான மோதல் போக்கு குறைந்துள்ளது. திமுகவுக்கு எதிரான போராட்டத்தையும் பாஜக வாபஸ் பெற்றது. எனவே திமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுமா என்ற கேள்வியானது எழுந்துள்ளது.

அந்த வகையில் கடந்த ஒரு சில வாரத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களும் அதற்கு சான்றாக அமைந்துள்ளது. குறிப்பாக திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வுக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்துள்ளார். இதில் இன்று நடைபெறும் இந்த விழாவில் பாஜக நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அண்ணாமலையும் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதே போல ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், திடீரென முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் 8 அமைச்சர்களும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். அங்கு ஆளுநர் ரவியோடு நீண்ட நேரம் தனியாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக நிர்வாகிகளுடன் கைகுலுக்கி பேசிக் கொண்டார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மிகப்பெரிய தலைவர் என்றும் நாட்டின் வழிநடத்துவதில் முக்கிய பங்காற்றியவர் எனவும் பாராட்டி வாழ்த்து செய்தியும் அனுப்பி உள்ளார்.

இதனை கிண்டல் செய்யும் வகையில் அதிமுக சார்பாக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த வீடியோவில் ஒரே காரில் ஸ்டாலின், உதயநிதி, அண்ணாமலை, ஓபிஎஸ் மற்றும் எ வ வேலு பயணிப்பது போல் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் திமுக மற்றும் அதிமுகவின் பிரச்சார பாடலை இணைத்து அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!