பாஜக பந்த்.. ஆதரவு தெரிவித்த வணிகர்கள்… கடைகளை திறக்க கூறிய திமுகவினர் : கலைஞரின் முதல் தொகுதியில் வெடித்த மோதல்..!!
Author: Udayachandran RadhaKrishnan28 June 2022, 7:41 pm
கரூர் : குளித்தலை அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரி பாஜகவினர் அழைத்து போராட்டத்திற்கு வணிகர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மீண்டும் அறிவிக்கக்கோரி குளித்தலை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
இதை ஒட்டி நேற்று குளித்தலை பகுதிகளில் உள்ள வணிககடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து இன்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் குளித்தலை பேருந்துநிலையம் பகுதிகளில் உள்ள திறந்து வைத்திருந்த சில கடை உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு தாருங்கள் என கேட்டுகொண்டு வந்துள்னர்.
அப்போது திமுவை சேர்ந்த நகராட்சி வார்டு கவுன்சிலர்களின் கணவர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து அனைத்து வணிக கடைகளுக்கு சென்று கடையை திறக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று இரவு மற்றும் இன்று காலை நேரங்களில் தெரிவித்து சென்றனர். இதனால் இரு தரப்பினரிடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் உள்ளிட்ட போலீசார் பாஜகவை சேர்ந்த ஒரு சிலரை வலுகட்டாயமாக இழுத்து போலீஸ் வேனில் ஏற்ற முற்பட்டனர். அப்போது பாஜகவினர்கள் போலீசாருடன் ஒருவரை மட்டும் ஏன் ஜீப்பில் ஏற்றுகிறீர்கள் எல்லாரையும் கைது செய்யுங்கள் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்துநிலையம் காந்திசிலை முன்பு சுமார் 1 மணிநேரமாக பாஜகவினருக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அதனையடுத்து பாஜகவை சேர்ந்த 24 பேரை கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றிச்சென்று அண்ணா சமுதாய மன்றத்தில் அடைத்து வைத்துள்ளனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், குளித்தலை மக்களின் நலன் கருதி அமைதியாக நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை சீர்குலைக்க திமுகவினர் முயற்சி செய்ததாகவும், அதனை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் காவல்துறையை வன்மையாக கண்டிப்பதுடன், தமிழக முதல்வர் ஜூலை 2ஆம் தேதி கரூர் வருகை தரும்போது மாவட்டம் முழுவதும் குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபடும் என தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் கலைஞரின் முதல் தொகுதியில் தொடரும் போராட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் இன்னும் கண்டு கொள்ளவில்லை என்கின்றனர் ஒருமித்த நடுநிலையாளர்கள்.
பொது பிரச்சனைக்காக வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தநிலையில் கடையை திறக்க சொல்லி திமுக வார்டு கவுன்சிலர்கள் ஈடுபட்டதால் வணிகர்கள் குழப்பம் அடைந்தனர்.