Gpay மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்… அண்ணாமலை மீது திமுகவினர் பரபரப்பு புகார்
Author: Babu Lakshmanan18 April 2024, 4:12 pm
வாக்காளர்களுக்கு Gpay மூலம் பணப்பட்டுவாடா செய்வதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நாளை காலை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிங்கை ஜி ராமச்சந்திரனும், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும் போட்டியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க: சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை துரத்திய காட்டு யானை… சுற்றுலா பயணிகள் நூலிழையில் எஸ்கேப்.. பதற வைக்கும் வீடியோ!!
இதனிடையே, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தேர்தல் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு Gpay மூலம் பணப்பட்டுவாடா செய்வதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- தான் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளராக உள்ளேன். பாரதிய ஜனதா கட்டியின் சார்பில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திரு. அண்ணாமலை அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக அவரது தேர்தல் பணிமனையில்
இருந்து வாக்காளர்களுக்கு அலைபேசியின் மூலம் அழைத்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு GPAY மூலம் பணம் அனுப்பி வருகிறார்.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை நாடாளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகமான அவினாசி சாலை அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி
இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரியும் GPAY மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகிறார், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.