மதுபாட்டில் வீசி தாக்கிய திமுகவினர்.. நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு ; இதுதான் திராவிட மாடலோ..? திமுகவுக்கு கடும் கண்டனம்!!
Author: Babu Lakshmanan1 March 2023, 8:54 am
திருவாரூர் ; திருவாரூர் அருகே நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் மதுபாட்டில் வீசிய சம்பவம் தொடர்பாக திமுகவினர் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
திருவாரூர் – முத்துப்பேட்டை அருகே சித்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் இருதினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தி.மு.க-வை விமர்சித்து பேசிக்கொண்டிருந்த நிலையில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் பொதுக்கூட்ட மேடையை நோக்கி மது பாட்டில்களை வீசினர். இதில் சிலவற்றை நாம் தமிழர் கட்சியினர் கையில் எடுத்து காட்டினார். இந்த பாட்டில் வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மது பாட்டில்களை வீசிவிட்டு ஓடி சென்ற, தி.மு.க-வை சேர்ந்த 2 பேரை பிடித்து கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், திமுக மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து தரக்குறைவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள், இடும்பவனம் கார்த்திக் ஆகியோர் மீது கோட்டூர் ஒன்றிய திமுக துணைச் செயலாளர் இனியசேகரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
மதுபாட்டிலால் தாக்கியவர்கள் மீத வழக்கப்பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதா..? என்று போலீசாருக்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு போடுவது தான் திராவிட மாடலோ.? தமிழகத்தில் வாய்ப்பூட்டு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த நினைப்பதும் தான் சமூக நீதியோ? மகளிர் உயர, மாநிலம் உயர்வது மதுபாட்டிலை தூக்கி பெண் மீது அடித்து தானோ? கருத்தை கருத்தால் எதிர்கொள்ள தெரியாதவர்களால் கல் வீசத்தான் முடியும்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இன்று வரை கேள்விக்குறி தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள் திமுக தொண்டர்கள். ஒரு பெண் மீது மதுபாட்டில் வீசும் கட்சி தான் பெண்ணியம், கருத்துரிமை பற்றி வாய் கிழிய பேசுகிறது. இதுவும் திராவிட மாடலில் தானே வருகிறது?,” எனக் குறிப்பிட்டுள்ளார்.