வாக்காளர்களுக்கு ரொக்கம், புடவை பட்டுவாடா… திமுகவினரை மடக்கிப் பிடித்த எதிர்கட்சிகள் : திணறும் அதிகாரிகள்…!! (வீடியோ)
Author: Babu Lakshmanan16 February 2022, 11:25 am
மயிலாடுதுறை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் விநியோகிக்கும் திமுகவினரை, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்து வருகின்றனர்.
தேர்தல் என்று வந்து விட்டால் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்குகளை பெறுவதில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டுவது வாடிக்கையாகும். இது தேர்தல் விதிகளின்படி, குற்றமாக இருந்தாலும், தேர்தல் அதிகாரிகளால் தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு ரொக்கம் மற்றும் ஹாட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கி வருகின்றனர். ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சந்திக்கும் முதல் நகர்ப்புற தேர்தல் என்பதால், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் பணியாற்றி வருகின்றனர். பரிசுப் பொருட்களையும் வாரி வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி பத்தாவது வார்டுக்குட்பட்ட ஹாஜியார் தெருவில் திமுகவினர் ஓட்டுக்கு 500 ரூபாய் என்ற வீதத்தில் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது. சம்பந்தப்பட்ட பகுதிக்கு பறக்கும் படையினர் சென்றபொழுது ராஜேஷ் என்ற ஒரு இளைஞரை 500 ரூபாய் நோட்டுகளாக கவரில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பிற கட்சியைச் சார்ந்தவர்கள் மடக்கிப் பிடித்து வைத்திருந்தனர்.
அந்த இளைஞரை பறக்கும்படையினர் விசாரணை செய்ததில் வெற்றிலை மண்டிக்கு பணம் எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த துணை வட்டாட்சியர் சதீஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையர் பாலுவிடம் பணத்தை ஒப்படைத்தார். பணம் மயிலாடுதுறை கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் திமுகவினர் பணம் வழங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்ற கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேபோல, நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள்களை திமுக விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பரமத்தி நகர திமுக இளைஞர் அணி அமைப்பாளர் வீடு வீடாக சென்று புடவை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, தகவல் அறிந்து அங்கு சென்ற பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுக நிர்வாகியை கையும் புடவையாக பிடித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தொடர்ந்து பரிசுப் பொருட்களையும், ரொக்கத்தையும் வழங்கி வருவதை தடுக்க முடியாமல் தேர்தல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.